இலங்கை முல்லைத்தீவில் இராணுவம் கெடுபிடி !

mullai_army_1

mullai_armyஉலகெங்குமுள்ள தமிழர்கள் விடுதலைபுலிகள் தலைவர் வே.பிரபாகரன் பிறந்த நாளை உணர்வெழுச்சியுடன் நினைவு கூருகிற அதவேளையில்,  இலங்கை முல்லைத்தீவில் இராணுவக் கெடுபிடி அதிகரித்துள்ளது. முல்லை நகர்ப்பகுதியில் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். முல்லையின் கடற்கரையோரப் பகுதி ,கோயில்கள், தேவாலயங்கள், சந்தை, வர்த்தக நிலையங்கள் என அனைத்து பிரதேசங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர் அதிகளவில் நடமாடி வருகின்றனர். இதனால் முல்லை நகர்ப்பகுதியல் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் உள்ள வைரவர் ஆலயத்தில் நேற்றிரவு முதல் மணி அடிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அங்கே தீபம் ஏற்றுவது குறித்தும் படையினர் எச்சரித்துள்ளனர். கடந்த சில நாட்களில் இரவில் இருந்த படை நடமாட்டத்தை விட இன்றைய நாளில் பகலில் இராணுவ நடமாட்டம் அதிகரித்துள்ளது.

திடீர் படைக்குவிப்பால் முல்லை நகர், கள்ளப்பாடு, தீர்த்தக்கரை, சிலாவத்தை ஆகிய பிரதேசங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதே வேளை, முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளனிலும் படைக்குவிப்பால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் மக்களின் எண்ணிக்கையை விட படையினரின் எண்ணிக்கை அதிகமென தோன்றுமளவுக்கு படைக்குவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்கிற பீதி நிலை முல்லைத்தீவெங்கும் பரவியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.