இலங்கை முல்லைத்தீவில் தமிழர்களின் நிலங்களை அபகரித்து சிங்கள மக்கள் குடியேற்றம்!

mullai theevu sl2mullai theevu sl1mullai theevu sl3

இலங்கை முல்லைத்தீவில் தமிழர்களின் நிலங்களை அபகரித்தும், காடுகளை அழித்தும் சிங்கள் மக்கள் திட்டமிட்டு மிக வேகமாக குடியேற்றப்பட்டு வருகின்றனர். நேற்று (04.11.2013) இப்பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்ட விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதேநிலை நீடித்தால் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் எஞ்சியிருக்கின்ற தமிழ்க் கிராமங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு முல்லைத்தீவு முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்தப்படும் என்று விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி எல்லைக் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தங்களுடைய விவசாய நிலங்களை ஆக்கிரமித்து, அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றுவதன் மூலம் வாழ்வாதாரத்துக்கு எதுவுமே அற்ற நிலையில் பொருளாதார வலுவற்ற சமூகமாக மாற்றி தமிழர்களை முற்றாக வெளியேற்றுவதும் இந்தச் சதித்திட்டத்தின் ஒரு அங்கம் எனவும் இந்தப் பகுதி மக்கள் தன்னிடம் கண்ணீருடன் சுட்டிக்காட்டியதாக விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.

தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, சிங்கள மக்கள் குடியேற்றப்படுவது உனடியாக தடுத்து நிறுத்தப்படாவிட்டால் முல்லைத்தீவு முழுமையாகப் பறிபோதை தவிர்க்க முடியாது எனவும் அவர் அச்சம் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் எல்லைக்கிராமத்தில் மட்டும் சுமார் 2581 ஏக்கர் தமிழ் மக்களுடைய விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக 1984-ம் ஆண்டிற்கு பின் கிட்டத்தட்ட 10 ற்கும் மேற்பட்ட தமிழ் கிராமங்களில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர். தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு மூன்றே வருடங்களில் 1987-ம் ஆண்டு முதல் படிப்படியாக இங்கு தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்க்ப்பட்டது.

கொக்குத்தொடுவாயில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற 2,581 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான ஆவணங்கள் இந்த மக்களிடம் இருக்கின்றன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே இந்த நிலங்கள் தமிழ் மக்களுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. இந்நிலையில், தற்போது தமது விவசாய நிலங்களுக்குச் செல்லும் தமிழ் மக்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சிங்கள மக்களால் விரட்டப்படுகின்றனர். நாங்கள் இந்த இடத்தில் 22 வருடங்கள் இருக்கிறோம். இங்கிருந்து வெளியேற முடியாது என்கின்றனர்.

அரச அதிகாரிளிடம் கேட்டபோது காணிகளின் பெர்மிட் புதிப்பிக்கப்பட வேண்டும். அவை புதிப்பிக்கபடாததால் சிங்கள மக்களுக்குக் கொடுத்துவிட்டோம் என்கின்றனர். யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக தமது இடங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பலரின் ஆவணங்கள் தொலைந்துவிட்டன. அவற்றை மீளப்பெறக்கூட இந்த மக்களுக்கு அவகாசம் அழிக்கப்படாமல் சிங்கள் மக்கள் குடியேற்றப்படுகின்றனர்.

2009-ம் ஆண்டுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முல்லைத்தீவு மாவட்டம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகிறது. கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாற்றுக்கேணி எல்லையோரக் கிராமங்கள் மிகத் தீவிரமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. வீடு கட்டித் தந்ததாகவும், வீதி போட்டதாகவும் அதிகாரிகள் கூறுவதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். வாழ்வாதாரத்துக்கான விவசாய நிலத்தைப் பறித்துவிட்டு வீடுகட்டி என்ன பயன் என இந்த மக்கள் கேட்கின்ற்னர். மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் காடுகள் அழிக்கப்பட்டு எல்லை வகுக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்ட எல்லைக்கிராம மக்களின் காணிகளை அவர்களிடமே கொடுக்க வேண்டும் என மாவட்ட அரச அதிபர் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். எனினும் எந்தவித பதிலுமின்றி ஆக்கிரமிப்பு தொடர்கிறது என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.