இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொன்றது: வீடியோ ஆதாரம்

isaipriya1

isai priya

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது ஏராளமான புலிகளுடன், அப்பாவி பொதுமக்களும் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப்பிரிவில் இடம்பெற்றிருந்த இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது.

இந்நிலையில், இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் மிகவும் கொடூரமான முறையில் கொன்றது தொடர்பான புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை பிரிட்டனைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. வயல்வெளி வழியாக தப்பிச் செல்ல முயன்ற  இசைப்பிரியாவை மிகவும் கொடூரமான முறையில் இலங்கை ராணுவ வீரர்கள் தரதரவென இழுத்துச் சென்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.

இதேபோல் மேலும் பல பெண்களை இலங்கை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளது. போரின்போதுதான் இசைப்பிரியா கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறி வருகிறது. ஆனால், தற்போது வெளியான வீடியோ காட்சிகள், இசைப்பிரியாவை ராணுவம் பிடித்துச் சென்று கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இலங்கையின் போர்க்குற்றத்தை வெளிச்சம் போட்டு காட்டும் வீடியோ வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

1981-இல் மே மாதம் 02ஆம் திகதி பிறந்த இசைப்பிரியாவின் இயற்பெயர் சோபனா. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இசைப்பிரியா வேம்படி இந்து மகளிர் பாடசாலையில் உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றிருந்தார்.

1996-இல் இடம்பெயர்ந்து மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வியை தொடர்ந்து கற்றிருந்தார். பின்னர் உயர் தரக் கல்வியை கற்றுக் கொண்டிருந்தபொழுது அதனை இடை நிறுத்தி ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

ஈழத்தின் அழகி என்று சொல்லத்தக்க வகையில் ஈழப் பெண்களின் அழகின் குறியீடான தோற்றத்தைக் கொண்டவர். மென்மையும் இரக்கமும் குளிர்ந்த இலட்சியப் பாங்கும் கொண்ட இசைப்பிரியா ஈழத்து மக்களுக்கு நடந்த அநீதிகளை கண்டு போராட வேண்டும் என்று தன் இளவயதில் போராட்டத்தில் இணைந்தவர். 1998-இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவில் அடங்குகிற ஊடகத்துறையான நிதர்சனபிரிவுப் போராளியாக இருந்தார்.

நீண்ட காலமாக நிதர்சனப் பிரிவிலேயே இருந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் நிதர்சனம் பிரிவு வளர்ச்சி பெற்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியாக பரிணமித்தது. அப்பொழுது தேசியத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுப் பொறுப்பாளராக இசைப்பிரியா கடமையாற்றினார்.

தமீழீழத் தேசியத் தொலைக்காட்சியில் அவர் வகித்த பங்கு முக்கியமானது. தொலைக்காட்சியின் தொடக்க கால செய்திப்பரிவுப் பொறுப்பாளராக இருந்த இசைப்பிரியா பின்னர் ஒரு படைப்பாளியாக மாறி தேசியத் தொலைக்காட்சிக்கு பல்வேறு படைப்புக்களை தந்திருக்கிறார்.