இலங்கை வடக்கில் சிங்களவர் குடியேற கூடாதெனில், விக்னேஸ்வரனும் கொழும்பு வர முடியாது : இராவணா பலய

ittekande-saddathissaமாகாணம் ஒன்றில் புதிதாக தமிழ் மக்களுக்கு காணிகளை வழங்கினால் வடக்கில் மட்டுமல்ல ஏனைய மாகாணங்களிலும் இனப் பரம்பலில் மாற்றம் ஏற்படும் என இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். வடக்கில் சிங்களவர்களை குடியேற்றுவதன் மூலம் அந்த மாகாணத்தில் இனப்பரம்பலிலுக்கு பாதிப்பு ஏற்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறுவாரேயானால் அவர் கொழும்புக்கு வர இடமளிக்க முடியாது. விக்னேஸ்வரன் முதலமைச்சர் என்ற வகையில் வடக்கில் முன்னர் குடியிருந்த சிங்கள மக்களை அங்கு குடியேற்ற வேண்டும். அவர்களை குடியேற்றுவதன் மூலம் இனப் பரம்பலில் மாற்றங்கள் ஏற்படாது.

வீடுகள், காணிகள் கொள்ளையிடப்பட்டு ஏற்கனவே அப்படியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புலிகளுக்கு ஆதரவான இந்த குழுவினர் வடக்கில் நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது அரசாங்கத்துடன் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அப்படி பிரச்சினைகளை ஏற்படுத்தி அரசாங்கம் தமது நிர்வாகத்திற்கு அழுத்தங்களை ஏற்படுத்துவதாக உலகத்திற்கும் மக்களுக்கும் சுட்டிக்காட்ட முயற்சித்து வருகின்றனர். அழுவதற்கு தருணம் பார்த்து கொண்டிருக்கும் மன்மோகன் சிங்கின் கண்ணை குத்தி அழ வைப்பதற்காக விக்னேஸ்வரன் அவசரமாக இந்தியாவுக்கு போகிறார். நாட்டில் இல்லாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என அவரிடம் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக சத்தாதிஸ்ஸ தேரர் கூறினார்.