தாது மணல் விவகாரத்தில் விசாரணைக் குழு ஆய்வு அறிக்கை அளித்த பின்னர், அரசு கொள்கை முடிவு எடுக்கும்: தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவிப்பு

jayalalithaa tn.cmசட்டசபையில் இன்று துணை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதன் மீது தே.மு.தி.க. உறுப்பினர் அழகாபுரம் மோகன்ராஜ் பேசினார். அவர் கூறுகையில், தாது மணல் பிரச்சினை குறித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்தார். அவர் கூறியதாவது:–

தாது மணல் எடுக்கப்படுவது குறித்து சில புகார்கள் எழுந்ததால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் தாது மணல் எடுக்கப்படுவதே இந்த அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்து இருக்கிறோம். அந்த விசாரணைக் குழு தாது மணல் எடுக்கப்படும் இடங்களில் எல்லாம் ஆய்வு மேற்கொண்டு அதன் பிறகு அரசுக்கு அறிக்கை அளித்த பின்னர் இந்த அரசு மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது இயற்கை வளங்களான கனிம வளம், நீர் வளம், நில வளம், எரிபொருள் வளம், வன வளம் ஆகியவற்றை முறைப்படி பயன்படுத்திக் கொள்வதைப் பொருத்து அமையும். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்கள் அரசின் முன் அனுமதியின்றியோ அல்லது அரசு அனுமதித்த அளவுக்கு மேல் வரம்பு மீறியோ சுரண்டப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

சட்ட விரோதமாக தாது மணல், அதாவது பீச்மினரல்ஸ் எனப்படும் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்றவை அள்ளப்படுகிறது என்பது குறித்த விவரங்களை, உண்மை நிலையை இந்த மாமன்றத்தில் எடுத்துரைப்பது எனது கடமையென கருதுகிறேன்.

கடற்கரை கனிம மணல் மற்றும் ஆற்றுப் படுகைகளில் கிடைக்கக்கூடிய தாது மணல் கனிமங்களான கார்னெட், சிலிமனைட், இலுமனைட், ரூட்டைல், சிர்கான், லியோகாக்சின் மற்றும் மோனோசைட் போன்ற கனிமங்களுக்கு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (அபிவிருத்தி மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1957 மற்றும் கனிமச்சலுகைகள் விதிகள், 1960 ஆகியவைகளின் கீழ் சுரங்க குத்தகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குத்தகை ஒப்பந்தம் மாவட்ட ஆட்சித் தலைவரால் ஏற்படுத்தப்படுகிறது.

இச்சட்டத்தின் அட்டவணை–1ல் பகுதி ‘பி’ ன் கீழ் வரும் அணுசக்தி கனிமங்களான இலுமனைட், ரூட்டைல், சிர்கான், லியோகாக்சின் மற்றும் மோனோசைட் போன்ற கனிமங்களுடன் கார்னெட் மற்றும் சிலிமனைட் ஆகிய கனிமங்களும் கலந்து இருக்கும் பட்சத்தில், அணுசக்தி ஆணையத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகு, மேற்படி சட்டத்தின் பிரிவு 5 உட்பிரிவின் கீழ் மைய அரசின் ஒப்புதலை பெற்ற பின்னரே மாநில அரசால் கனிம குத்தகை உரிமம் வழங்க இயலும்.

இந்த தாது மணல் கனிமங்கள் அடங்கிய பெரும் கனிமங்களுக்கான, மேஜர் மினரல்ஸ்க்கான குத்தகை பகுதி 5 ஹெக்டேர் முதல் 50 ஹெக்டேர் வரை இருந்தால், மாநில சுற்றுச்சூழல் அமைப்பிடமிருந்து சுற்றுச் சூழல் சான்றிதழ் பெற்றால் போதும். குத்தகை பகுதி 50 ஹெக்டேருக்கும் மிகைப்பட்டிருந்தால் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்திடமிருந்து சுற்றுச்சூழல் சான்றிதழை பெற வேண்டும்.

கடலோரப் பகுதிகளில் கடற்கரை உயர் அலை மட்டத்திலிருந்து 500 மீட்டர் அளவு வரை கடல் முறைப்படுத்துத்தப்பட்ட பகுதி, என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் கனிம சுரங்கங்களுக்கு, 1991 ஆம் ஆண்டு கடற்கரை முறைப்படுத்துதல் மண்டல அறிவிக்கையின்படி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

குத்தகைக்கு விண்ணப்பிக்கப்பட்ட பரப்பு 5 ஹெக்டேருக்கும் கீழ் இருக்கு மாயினும், வரையறுக்கப்பட்ட கடற்கரை முறைப்படுத்துதல் மண்டலத்திற்குள் வரும் பட்சத்தில், 1991 ஆம் ஆண்டு கடற்கரை முறைப்படுத்துதல் மண்டல அறிவிக்கையின்படி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் தடையில்லா சான்று பெற வேண்டும்.

கார்னெட் மற்றும் சிலிமனைட் ஆகிய கனிமங்களுக்கான சுரங்க திட்ட, ஒப்புதலை அளிக்கும் அதிகாரம் மத்திய அரசின் இந்திய சுரங்க கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய கனிமங்களான ரூட்டைல், இல்மனைட், சிர்கான் போன்ற கனிமங்களுக்கான சுரங்க திட்ட ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் மத்திய அரசின் அணு சக்தி கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட சுரங்கத் திட்டத்தின்படி, கனிம அகழ்வு மேற்கொள்ளப் படாவிடின், கனிமச்சலுகை மற்றும் மேம்படுத்துதல் விதிகள், 1988ன் விதி உட்பிரிவு 13(2)ன் படி மைய அரசைச் சேர்ந்த இந்திய கனிமக் குழுமத்தின் மண்டல கனிம கட்டுப்பாட்டு தலைமை அலுவலருக்கு, மேற்படி கனிம குத்தகையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிகாரமுள்ளது. இத்தவறுகள் சரிசெய்யப்படும் பட்சத்தில், அதே விதிகளின் கீழ், கனிம குத்தகையை தொடர ஆணையிடவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மைய அரசு நிர்ணயித்தவாறு கார்னெட் கனிமத்திற்கு ராயல்டி தொகையாக இந்திய கனிம குழுமம் மாதந்தோறும் வெளியிடும் விற்பனை மதிப்பில் 3 சதவிகிதம் என்ற கணக்கில் வசூலிக்கப்படுகிறது. இலுமனைட், ரூட்டைல் போன்ற கனிமங்களுக்கு விற்பனை விலையில் அட்வேலரம் அடிப்படையில் 2 சதவிகிதம் ராயல்டி நிர்ணயிக்கப்படுகிறது. இந்நேர்வுகளில் மைய அரசு மட்டுமே ராயல்டி தொகையை நிர்ணயம் செய்ய முடியும்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தன்னுடைய 06.08.2013 நாளிட்ட கடிதத்தில் கார்னெட், இலுமனைட், ரூட்டைல் மற்றும் மோனோசைட் போன்ற கனிமங்களை எடுப்பதற்காக வழங்கப்பட்ட குத்தகை இடங்களில் முறைகேடாக இவை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின்படி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் 08.08.2013 அன்று அரசுக்கு தனது பரிந்துரையை அனுப்பி வைத்தார். இவற்றை பரிசீலித்த எனது அரசு, வருவாய்த் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தலைமையின் கீழ் ஒரு சிறப்புக்குழுவை அமைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள 6 சுரங்க குத்தகைகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டுமென 08.08.2013-ல் ஆணையிட்டது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தின் தாது மணல் சுரங்க நடவடிக்கைகளை முழுவதுமாக நிறுத்தி வைக்கவும், மேற்படி சிறப்புக்குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும் எனவும் எனது அரசு ஆணையிட்டது. அதன்படி சிறப்புக்குழு தனது ஆய்வறிக்கையை 17.09.2013 அன்று என்னிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை அரசின் ஆய்வில் உள்ளது. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று உறுப்பினர் கேட்டார். என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளோம் என்பதை விவரித்துக் கொண்டிருக்கிறேன்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் தனது 17.09.2013 நாளிட்ட கடிதத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் 52 தாது மணல் கனிம குத்தகைகள், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 11 தாது மணல் கனிம குத்தகைகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தாது மணல் கனிம குத்தகைகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் 2 தாது மணல் கனிம குத்தகைகள், என மொத்தம் 71 தாது மணல் கனிம குத்தகைகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும், இந்தக் குத்தகைகள் மூலம் கார்னெட், சிலிமனைட், இலுமனைட், ரூட்டைல், சிர்கான், லியோகாக்சின் மற்றும் மோனோசைட் போன்ற கனிமங்களை அகழ்ந்தெடுக்க தனியார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவே, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டங்களில் தனியாருக்கு வழங்கப்பட்ட கார்னெட், சிலிமனைட், இலுமனைட், ரூட்டைல், சிர்கான், லியோகாக்சின் மற்றும் மோனோசைட் போன்ற தாது மணல் கனிமங்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை பகுதிகளை ஆய்வு செய்து ஒருமித்த ஆய்வறிக்கையை அளிக்க ஆணையிடலாம் என அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இதன் அடிப்படையில், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டங்களில் கார்னெட், சிலிமனைட், இலுமனைட், ரூட்டைல், சிர்கான், லியோகாக்சின் மற்றும் மோனோசைட் போன்ற தாது மணல் கனிமங்களை அகழ்வு செய்ய தனியாருக்கு வழங்கப்பட்ட 71 சுரங்கக் குத்தகை பகுதிகளிலும் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க வருவாய்த் துறை செயலர் தலைமையின் கீழ் சிறப்புக் குழு அமைத்திடவும், மேற்படி மாவட்டங்களில் இயங்கி வரும் தாது மணல் குவாரிகளின் செயல் பாட்டினை நிறுத்தி வைக்கவும் நான் ஆணையிட்டேன். என்னுடைய உத்தரவிற்கிணங்க 17.09.2013 நாளிட்ட தொழில் துறை அரசாணை வெளியிடப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட சிறப்புக்குழு ஆய்வினை முடித்து அது தொடர்பான அறிக்கையை அரசுக்கு விரைவாக அளிக்க வேண்டுமெனவும் ஆணையிட்டுள்ளேன்.

வருவாய்த்துறை செயலரின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, தனது புலத் தணிக்கையை 17.10.2013 அன்று திருநெல்வேலியில் உள்ள தாது மணல் குவாரிகளில் தொடங்கியுள்ளது.

அப்பு நடேசன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) தனது 21.12.2008 நாளிட்ட மனுவில் தயாதேவதாஸ் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களான திருவாளர்கள் சதர்ன் என்டர்பிரைசஸ் மற்றும் இந்தியன் கார்னட் சாண்ட் கம்பெனி (பிரை வேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு, திருச்சி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வழங்கப்பட்ட கனிமக் குத்தகைகளில் சுற்றுச்சூழல் விதி மீறல்கள் உள்ளதாகக் கூறி அதன்மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசைக் கேட்டுக் கொண்டார். மேலும், 09.02.2010 அன்று தொடர்ந்த ரிட் மனுவின்படி மேற்கூறிய நிறுவனங்களுக்கு வழங்கிய கனிம குத்தகைகளில் அரசு தணிக்கை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் ஆணையையும் பெற்றார்.

இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் ஒரு குழுவினை அமைத்து புலத்தணிக்கை செய்து மேற்கூறப்பட்ட நிறுவனங்கள் அனுமதியின்றி பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்னெட் மணல் வெட்டி எடுக்கப்பட்டதை அரசுக்கு தெரிவித்திருந்தார். இம்முறை கேடுகள் குறித்து 14.11.2011 அன்று அரசு கடிதம் மூலம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு தெரியப்படுத்தப்பட்டது. இவ்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நீதிப் பேராணை மனு மீது 18.11.2011 அன்று இறுதி ஆணை வழங்கிய உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் தொடர்புடையவர்களுக்கு உரிய வாய்ப்பு அளித்து சட்டத்திற்கு உட்பட்டு அப்பு நடேசனின் 21.12.2008 நாளிட்ட மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என தீர்ப்பளித்தது.

இந்தச் சூழ்நிலையில், தயாதேவதாஸ், மேற்கண்ட உயர் நீதிமன்ற ஆணையை எதிர்த்து மறு பரிசீலனை வழக்கினை தொடுத்துள்ளார்.

இருப்பினும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிக்கையின் மீது அரசு நடவடிக்கை எடுத்து மேற்கண்ட நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வழங்கப்பட்ட ஐந்து சுரங்க குத்தகைகளை 01.02.2013 தேதியிட்ட அரசாணைகள் மூலம் ரத்து செய்து ஆணையிட்டது.

இந்த ஆணைகளை எதிர்த்து 5 உயர்நீதிமன்ற வழக்குகள் இந்நிறுவனங்களால் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் எதிர் வாதுரை, அரசால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும், சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை 06.02.2013 அன்று வழங்கிய இடைக்கால ஆணையில், மேற்படி சுரங்கங்களில் முறைகேடாக வெட்டியெடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள கார்னெட் மணலை அப்புறப்படுத்தக் கூடாது என்றும், மனுதாரரும் அம்மணலுக்கு இடையூறு செய்யக் கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது. இந்த இடைக்கால ஆணை தற்போது நடைமுறையில் உள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் இருந்த மறுபரிசீலனை மனு மற்றும் அனைத்து வழக்குகளும் ஒரே தொகுப்பு வழக்காக, ஆக மாற்றப்பட்டு சென்னை உயர்நீதி மன்ற அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், முறைகேடுகள் குறித்து அனைத்து குவாரிகளையும் ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் பெருங்கனிமக் குவாரிகள் குறித்து ஒரு கொள்கை முடிவு எனது அரசால் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.