பரலையாறு கால்வாயை சீரமைக்க ரூ.22 கோடி: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

tn-cmfதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–முதலமைச்சர் ஜெயலலிதா முந்தைய ஆட்சிக் காலத்தில் பாசன நிலங்களுக்கு ஆதாரமாக உள்ள உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் 2005 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதற்காக 2,082 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 6.69 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்க திட்டமிட்டது.

இதன் கீழ் இதுவரை 25 மாவட்டங்களில் 4,910 ஏரிகள், 662 அணைக்கட்டுகள் மற்றும் அதன் 8,590 கிலோ மீட்டர் நீர்வழங்கு வாய்க்கால்கள் ஆகியவற்றை புனரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றன.

வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் கிடைக்கும் அதிக அளவு நீர், வைகை நதியின் இணைக் கால்வாயான பரலையாறு கால்வாய்க்கு திருப்பி விடப்படும். இதன் மூலம் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் பகுதியிலுள்ள ஏரிகள் மிகவும் பயன்பெறும்.

ஆனால் வெள்ளக்காலங்களில் கிடைக்கும் அதிக அளவு நீரினை கொண்டு செல்லும் வகையில் பரலையாறு கால்வாய் இல்லாததால், மிகை நீர் வீணாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த நிலைமையை போக்கி, அதிக அளவு நீரினைக் கொண்டு செல்லும் வகையில், இந்தக் கால்வாய் சீரமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

எனவே, முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ், 22 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் பரலையாற்று கால்வாயினை மேம்படுத்தி சீரமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்தத் திட்டத்தின் மூலமாக, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் வட்டங்களில், வறட்சி பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் உள்ள 54 கண்மாய்கள் மூலம் 4,957 ஏக்கர் நிலங்களில் பாசனம் உறுதிப்பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply