குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதில் இலங்கை முதலிடம்!

motherbaby

குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதில் இலங்கை ஏனைய நாடுகளை விட முன்னணியில் உள்ளது. இதனை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டு 99 வீதத்திற்கு மேம்படுத்துவதே எமது நோக்கமாக உள்ளது என்று பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸ்ஸநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கும் வீதம் தற்போது 90 வீதமாக உள்ளது. அதனை 99 பிளஸ் 100 வீதமாக மாற்றுவதே எமது திட்டமாகும். இதற்கேற்ப பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

sl health ministerதாய்ப்பாலூட்டுவதற்கான ஆதரவு தாய்மார்களுக்கு அருகில் எனும் கருப்பொருளில் தேசிய தாய்ப்பாலூட்டல் வாரம் இன்று ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் செயலமர்வு நேற்று சுகாதார காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தாய்பாலூட்டுவதின் முக்கியத்துவம் அதன் பயன்கள் இலங்கையில் தாய்பாலூட்டலை ஊக்கப்படுத்துவதன் அவசியம் என்பன பற்றி தெளிவுப்படுத்தப்பட்டது.

அதாவது ஒரு தாய் தன் குழந்தைக்கு குறைந்தது 6 மாதங்கள் தாய்பால் ஊட்டுவது அவசியம். 2 வயது வரை தாய்ப்பாலூட்டுதல் மிகவும் சிறப்பானது. இது ஏனைய விட்டமின்கள் உணவுகளை விட சிறந்தது. தாய்பால் உட்கொள்ளும் குழந்தை ஆரோக்கியமானதாகவும் தெளிவானதாகவும் இருக்கும்.

கல்வி, விளையாட்டு என்ற அனைத்து நடவடிக்கைகளிலும் தாய்ப்பால் அருந்தாத குழந்தையை விட தாய்பால் அருந்திய குழந்தைகள் முன்னேற்றகரமானதாக இருக்கும்.

ஒவ்வொரு தாயும் தாய்பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து முறையான வகையில் அதனை தமது பிள்ளைகளுக்கு வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையையும் சமுதாயத்தினையும் உருவாக்க முடியும். இதுவே சுகாதார அமைச்சினதும் மகிந்த சிந்தனையினதும் குறிக்கோளாக இருக்கின்றது.

தமது செளகரியங்கள் கருதி சில தாய்மார் தாய்ப் பாலூட்டுவதை தவிர்த்து புட்டிப்பால் ஊட்டுகின்றனர். இது தவறான ஒரு நடவடிக்கையாகும். தாய்பாலில் இருக்கின்ற சத்து வேறு எந்த பால்மாவிலும் இல்லை என்பதனை தாய்மார் உணர வேண்டும். மேலும் பாலூட்டல் தொடர்பான தெளிவை பெறுவதற்கு தாய்மார் முன்வர வேண்டும்.

இன்று இலங்கை முழுவதும் 45,000 குடும்ப நல சுகாதார உத்தியோகஸ்தர்கள் தாய்ப்பால் வழங்கல் தொடர்பிலான தெளிவை வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். முழு இலங்கையில் 90 வீதமாக தாய்பாலூட்டலில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மட்டும் அல்லாமல் தோட்டப்புறங்களில் 87 வீதமாக முன்னேற்றம் காணப்படுகின்றது. இந்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

தாய்ப்பாலூட்டலில் ஏதாவது பிரச்சினைகள் தோன்றினால் அருகிலுள்ள குடும்ப நல வைத்தியரை நாடுவது அவசியமானதாகும். அது மட்டுமல்லாது குழந்தை இயற்கை முறையிலோ சத்திரசிகிச்சை முறையிலோ பிறந்தாலும் குடும்பத்தவர்கள் உறவினர்கள் தாய்மாருக்கு ஆதரவாகவும் பாலூட்டுவதற்கு உதவியான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.

பிறந்த குழந்தைகளுக்கு சேவையை வழங்கும் வைத்தியசாலையில் பிறந்த குழந்தைகளை கவனிக்கும் ஒவ்வொரு அலுவலர்களும் பாலூட்டுவது தொடர்பான அறிவுரைகளை வழங்கும் 40 மணித்தியால பாடநெறியில் பயிற்சி பெற்றதனை உறுதிப்படுத்துவதுடன் 2010 ஆம் ஆண்டிற்குரிய போசனை தொடர்பான கொள்கை மற்றும் தாய், சேய் சுகாதாரம் தொடர்பான 2013ஆம் ஆண்டிற்கான கொள்கைகளில் குறிப்பிட்டப்படி தேசிய பாலூட்டும் கொள்கையினை அமுல்படுத்துவதற்கான சகல திறமைகளையும் கொண்டுள்ளார்கள் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும்.

தாய்மார்களுக்கு குழந்தை பிறந்து ஒரு மணித்தியாலத்திற்குள் தாய் பாலூட்டுவதனை ஆரம்பிப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும். குழந்தைகள் பிறந்தவுடன் தாய்பாலூட்டும் வரை தாயுடன் தோல் தொடர்பை வைத்திருக்க வேண்டும். அவற்றில் குறைந்த நிறையுடைய மற்றும் சத்திர சிகிச்சை முறை மூலம் பிறந்த குழந்தைகளை அதிக கவனம் செலுத்தல் வேண்டும். தாயும் சேயும் நன்றாக இருப்பதற்கான சந்தர்ப்பங்களை அதிகளவு வழங்க வேண்டும். 24 மணி நேரமும் ஒன்றாக இணைந்திருத்தல் தாய்ப்பால் ஊட்டலை விரிவுப்படுத்த வேண்டும். மேற்கூறிய இவ்விடயங்களில் குழந்தை பிறந்த வைத்தியசாலைகள் கவனம் எடுக்க வேண்டும். அத்தோடு தாய்பாலூட்டுவதற்கான நம்பிக்கை இல்லாத தாய்மார்களை குழந்தை பிறந்த பின்னர் வீட்டுக்கு அனுப்பக்கூடாது. தாய்பால் தொடர்பான தெளிவை வழங்கிய பின்னரே அவர்கள் வீட்டுக்கு செல்வதற்காக அனுமதிக்க வேண்டும்.

மேலும் தாய்பாலூட்டல் வாரத்தின் நோக்கமாக குழந்தை பிறந்ததிலிருந்து சமூகத்திலும் வைத்தியசாலையிலும் தாய்பால் ஊட்டலுக்கு ஆதரவு அளித்தல் வேண்டும். தாய் பாலூட்டல் தொடர்பான அறிவுரைகளை சுகாதார கவனிப்பு வேலையாட்கள் மூலம் வழங்குதல் பாலூட்டல் தொடர்பான முகாமைத்துவ மையத்தினை வைத்தியசாலைகளிலும் உருவாக்கல் குடும்பங்கள் உறவினர்கள் தாய்பாலூட்டுவதற்கான ஆதரவை வழங்குதல் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதாக இச் செயலமர்வில் கூறப்பட்டது.

இச்செயலமர்வில் சுகாதார வைத்திய உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply