குடிநீர் கோரிப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இலங்கை இராணுவம் துப்பாக்கிச் சூடு!

sl armyகம்பஹா மாவட்டத்தில் உள்ள வெல்வெரிய பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கோரிப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவத்தில் மேலும் 28 பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு அவர்களின் ஒளிப்படக் கருவிகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.

வெல்வெரிய பகுதியில் உள்ள ஹேலீஸ் குழுமத்தின் தொழிற்சாலைக் கழிவுகளால் தமது குடிநீரில் இரசாயனம் கலப்பதாக தெரிவித்து அதனை மூட நடவடிக்கை எடுக்கும்படி கோரி அப்பகுதி மக்கள் 4000 பேர் வரை நேற்று ( 01.08.2013) கண்டி-கொழும்பு வீதியை மறித்து போராட்டம் நடத்தினர்.

முன்னதாக அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா அரசதரப்பிடம் கோரிக்கைகள் விடப்பட்டும், ஒருவாரமாக உண்ணாவிரதம் இருக்கும் பௌத்த பிக்குவின் கோரிக்கையை அரசாங்கம் கவனத்தில் எடுக்காத நிலையிலுமே, இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

பெலும்மகர சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தினர்

எனினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாத நிலையில், நேற்றுமாலை சிறிலங்கா இராணுவம் வரவழைக்கப்பட்டது. அங்கு வந்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் ஒருவர் 5 நிமிடங்களுக்குள் கலைந்து செல்லும்படி பொதுமக்களுக்கு உத்தரவிட்டதுடன், ஊடகவியலாளர்கள் எவரையும் படம் எடுக்கக் கூடாது என்றும் மிரட்டினார்.

அதன் பின்னர் பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியும், பொல்லுகளால் தாக்கியும் விரட்டினர். இதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் மரணமானார். மேலும் 28 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். இவர்களில் பலரின் நிலை ஆபத்தாக உள்ளது.

இதனிடையே போராட்டக்காரர்கள் படையினர் மீது பெற்றோல் குண்டுகளை வீசியதால் தான் துப்பாக்சிச் சூடு நடத்தப்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply