குழந்தையின் உடலில் திடீர், திடீரென பற்றும் தீ: அலறும் கிராம மக்கள்!

baby body fire

திண்டிவனத்தை அடுத்த உப்பு வேலூர் அருகே உள்ளது. பொம்மடிபட்டு கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் கர்ணன், கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு நர்மதா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கு 2 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராகுல் என்று பெயர் வைத்தனர்.

பிரசவத்தை அடுத்து ராஜேஸ்வரி தனது தாய் ஊரான மயிலம் அருகே உள்ள நெடுமொழியனூர் கிராமத்தில் தங்கியிருந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு திடீரென ராகுலின் கை தீ பிடித்து எரிந்தது. இதனால் கையில் காயம் ஏற்பட்டது. முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

அதன்பிறகு அந்த ஊரில் சில வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இந்த குழந்தைக்கு ஏதோ பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் குழந்தை உடலில் தீ பற்றுவதுடன், வீடுகளிலும் தீ பிடிக்கிறது என கிராம மக்கள் கருதினார்கள்.

எனவே ஊரை விட்டு செல்லும்படி ராஜேஸ்வரியை வற்புறுத்தினார்கள். இதனால் புதுவை அருகே உள்ள சிங்கிரிகோவிலுக்கு வந்து தங்கினார். அங்கு அபிஷேகபாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த போது மீண்டும் குழந்தை உடலில் தீபிடித்தது. இதனால் குழந்தையை கிருமாம் பாக்கத்தில் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை முடிந்து அவர் தனது கணவரின் ஊரான பொம்மடிபட்டுக்கு சென்றார்.

அங்கு 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் குழந்தை உடலில் தீ பிடித்தது. திண்டிவனம் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்துவிட்டு வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் 31.07.2013 அன்று குழந்தை தங்கியிருந்த வீட்டின் பக்கத்து வீட்டில் தீ பிடித்தது.

இந்த குழந்தையால் தான் வீடுகள் தீ பிடிக்கிறது என்று கருதி கிராம மக்கள் கோபம் அடைந்தனர். இதனால் குழந்தையை அங்குள்ள கோவிலில் கொண்டு வைத்தனர்.

இதற்கிடையே மனவேதனையில் இருந்த குழந்தையின் தாய் ராஜேஸ்வரி நேற்று விஷம் குடித்தார். அவரை முண்டியம் பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இது தொடர்பாக குழந்தையின் தந்தை கர்ணன் கூறியதாவது:– எனது குழந்தையை எங்கு கொண்டு சென்றாலும் அங்கு விபரீத சம்பவம் நடந்து வருகின்றது. குழந்தை உடலில் தீபிடிப்பதுடன் அந்த ஊரில் உள்ள வீடுகளிலும் தீ பிடிப்பதால் ஊர்மக்கள் அச்சம் அடைந்து எங்களை ஊருக்குள்ளேயே விடாமல் விரட்டியடிக்கின்றனர்.

இதனால் பெரும் மன உழைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். குழந்தையை நாங்கள் தொடர்ந்து வளர்த்தால் ஏதேனும் பிரச்சினை ஆகிவிடுமோ என பயமாக இருக்கிறது. எனவே குழந்தையை அரசிடம் ஒப்படைத்து விடலாமா? என்று யோசித்து வருகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தையின் உடலில் தீ பிடித்ததும் காயம் ஏற்படுகிறது. ஆனால் அந்த காயம் அடுத்த நாளே முற்றிலும் ஆறி குணமாகி விடுகிறது. இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இது சம்மந்தமாக டாக்டர்கள் ஆய்வு செய்து விபரத்தை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

 

Leave a Reply