சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆக.02-ந்தேதி திறப்பு: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

jayalalithaa tn.cmதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடும் வகையில், பாசன ஆதாரங்களை வலுப்படுத்துவதிலும், வேளாண் துறையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதிலும், விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இந்தியாவிற்கே முன்னோடியாக எனது தலைமையிலான தமிழக அரசு விளங்கி வருகிறது.

நான் மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், மேட்டூர் அணையின் நீர் இருப்பையும், விவசாயிகளின் எதிர்பார்ப்பையும், வேளாண் உற்பத்தி பெருக்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு, வழக்கமாக ஜுன் 12-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீரினை திறந்து விடுவதற்குப் பதிலாக, முதன் முறையாக முன் கூட்டியே, 2011-2012 ஆம் ஆண்டு பாசனத்திற்காக ஜுன் 6-ந்தேதி முதல் நீரினைத் திறந்துவிடுமாறு ஆணையிட்டேன்.

இதன் காரணமாகவும், விவசாயிகளுக்கு புதிய சலுகைகள் வழங்கியதன் காரணமாகவும், விவசாயத்தில் புதிய உத்திகள் மேற்கொண்டதன் காரணமாகவும், 2011-2012 ஆம் ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு 101.52 லட்சம் மெட்ரிக் டன் அளவை எட்டி சாதனை படைத்தது. இதற்கான மத்திய அரசின் விருதும் தமிழகத்திற்குக் கிடைத்தது.

2012 ஆம் ஆண்டு, தமிழகத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், காவிரி நீரில் தமிழகத்திற்குரிய பங்கினை கர்நாடகம் தர மறுத்ததன் காரணமாகவும், 17.9.2012 முதல் தான் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டது.

எனினும், கிடைத்த நீரைக் கொண்டு அதிக அளவிலான நெற் பயிரை காப்பாற்றும் வகையில் பல புதிய உத்திகளை கையாள நடவடிக்கை எடுக்கப்பட்டது. நடப்பாண்டில், ஜுன் 12-ந்தேதியன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 17.82 அடியாக, அதாவது, 3.491 டி.எம்.சி. அடியாக, பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகக் குறைந்த நீரே இருந்ததால், சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிட இயலவில்லை.

காவிரியில் நமக்கு உரிய பங்கினை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடச் செய்ததுடன், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்திடவும் எனது அரசு போராடி வருகிறது.

எனவி, காவிரியில் நமக்குரிய பங்கு நீரை நாம் பெற்றே தீருவோம். தற்போது, கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, தொடர் மழை பெய்து வருவதால், அங்குள்ள முக்கிய அணைகளான ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகியன முழு கொள்ளளவை எட்டி வருகின்றன.

கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 89.5 அடி, அதாவது 52.19 டி.எம்.சி. அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு கணிச மான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்குப் பருவ மழை நன்றாக இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளதால், இந்த மாத இறுதிக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 டி.எம்.சி. அடியாக உயரக் கூடும் என்றும், தென் மேற்கு பருவமழை முடியும் தருவாயில், அதாவது 30.9.2013-க்குள் மேலும் 90 டி.எம்.சி. அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரக்கூடும் என்றும்;

வடகிழக்கு பருவ மழையின் மூலம் 48 டி.எம்.சி. அடி நீர்வரத்து தமிழ்நாட்டிற்கு வரப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், 2014 ஆம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் 193 டி.எம்.சி. அடி நீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக மேட்டூர் அணையின் நீர் இருப்பு 60 முதல் 65 டி.எம்.சி. அடி ஆக இருக்கின்ற போது, பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இருப்பினும், கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதையும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதையும் பார்க்கும் போது, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக உயரும் என்றும், இதன் காரணமாக நீர்மட்டம் வெகு விரைவில் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, மேட்டூர் அணையிலிருந்து வழக்கம் போல சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் நீண்டகால மற்றும் நடுத்தர கால சம்பா சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக, 02.8.2013 முதல் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சம்பா சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதற்குத் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை வேளாண்மைத் துறை எடுக்கும் என்பதையும், விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவை இருப்பில் உள்ளன என்பதையும், விவசாயிகளுக்குத் தேவையான கருவிகளை குறைந்த வாடகையில் வழங்க வேளாண் பொறியியல் துறை தயார் நிலையில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

Leave a Reply