அடிக்கடிப் பற்றி எரியும் திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கு: போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்!

DSCN0097DSCN0102திருச்சி அரியமங்கலம் திடீர்நகர் அருகில் மாநராட்சிக்கு சொந்தமானக் குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மேற்படி குப்பைக் கிடங்கில்தான் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைக்கிடங்கில் அடிக்கடிப் தீ பற்றி எரிவதால்  சுற்றுச்சூழலுக்கும், சுற்றுப்புறத்தில் வசிக்கக்கூடிய பொது மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

 கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறைக்கு மேல் தீப்பற்றி எரிந்தது. மறுபடியும் கடந்த 23.07.2013 அன்று பற்றியப் பயங்கர தீ, இந்த செய்தி பதிவாகும் இந்த நிமிடம் வரை தொடர்ந்து 3 நாட்களாக எரிந்து கொண்டே தான் இருக்கிறது. இதிலிருந்து வெளிப்படும் நச்சு புகையால் குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் சுவாசக் கோளாறும், உடல் உபாதைகளும் ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அருகிலுள்ள பள்ளிகளுக்கும், தொழிற்கூடங்களுக்கும் தற்காலிக விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பல குடும்பங்கள் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்களின் வீட்டிற்கு சென்று விட்டனர். கடுமையான புகை மூட்டத்தால் திருச்சி – தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிப்பும், விபத்துகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. பொது மக்களின் சார்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் பல முறை புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மூன்று நாட்களாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைப்பதற்கு போராடி வருகின்றனர். ஆனாலும் இன்னும் புகைந்து கொண்டேதான் இருக்கிறது. வருண பகவான் கருணைக் காட்டினால் மட்டும் தான் தீ அணையும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் அரியமங்கலம் குப்பைக் கிடங்கை போர்கால அடிப்படையில் அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களின் ஆதரவுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

                                                                                     -இரா.அருண்கேசவன்DSCN0099 reportreport1f

Leave a Reply