கொமன்வெல்த் தலைவராக ராஜபக்ச இருப்பதை அனுமதிக்க முடியாது: மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்

D-1703

இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது. அம்மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ஜி. கே. வாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை பிரச்சினையில் மாணவர்களின் உணர்வுகளை மதிக்கிறோம்.

காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை இந்தியா இரண்டாவது முறையாக ஆதரித்தது. அமெரிக்கா தீர்மானம் நீர்த்து போவதற்கு இந்தியா காரணம் என கூறுவது தவறு. தமிழக மக்களின் பிரதிபலிப்பை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தெரிவித்துள்ளேன்.

இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. கொமன்வெல்த் தலைவராக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச இருப்பதை அனுமதிக்கக்கூடாது. அம் மாநாட்டை வேறு நாட்டில் நடத்த நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் இணைந்து முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற ஐபிஎல் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றார்.

மாணவர்கள் போராட்டத்தையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply