இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்!

jayalalitha.

இலங்கை தலைநகர் கொழும்பில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் மற்றும் இனஒழிப்பு குறித்து தமிழகம் உள்பட உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர். மேலும், இந்தப் பிரச்னை தொடர்பாக கடந்த 18 ஆம் தேதி தங்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்ததை நினைவுபடுத்துகிறேன்.

மேலும், இலங்கையில் இப்போதும் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பதுடன் அதில் திருத்தங்களையும் செய்ய வேண்டுமென யோசனை தெரிவித்திருந்தேன். ஆனால், ஐ.நா.மன்றத்தில் கொண்டு வரப்பட்ட நீர்த்துப் போன தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. இந்தப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்தச் சூழலில், வரும் நவம்பர் 15 முதல் 17 வரையில், காமன்வெல்த் மாநாட்டை இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுபோன்ற ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டை இலங்கையில் நடத்தினால், அந்த நாடு நிகழ்த்திய போர்க்குற்றங்கள், இனஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் இப்போது நடந்து வரும் மனிதஉரிமை மீறல் செயல்களை அங்கீகரிப்பது போலாகி விடும்.

கொள்கைகளை மதிக்காத நாடு: காமன்வெல்த்தின் கொள்கைகளான மனித உரிமைகள், சமநிலை, ஜனநாயக சுதந்திரம் போன்றவற்றை மதிக்காத நாடாக இலங்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், இனஒழிப்பு மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை அமைப்பை ஏற்பதற்கு அந்த நாட்டை வற்புறுத்தவும், இலங்கைத் தமிழர்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் உரிமைகள் சமமாக கிடைக்கச் செய்யவும், அவர்கள் கண்ணியத்துடன் வாழவும் இந்த மாநாட்டை சிறந்ததொரு வாய்ப்பாக இந்தியா பயன்படுத்த வேண்டும்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின் பக்கம் நிற்கும் சர்வதேச தலைமையாக இந்தியா விளங்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. இலங்கைப் பிரச்னையில் தேசிய அளவிலான பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தியா மிக முக்கிய பங்கினை வகிக்க வேண்டும். அதற்கு இந்த மாநாட்டை ஒரு வாய்ப்பாக உபயோகிக்க வேண்டும்.

கனடா புறக்கணிக்கிறது: இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் அதை புறக்கணிக்கப் போவதாக கனடா அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரிட்டனில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் காமன்ஸ் கமிட்டியும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் பங்கேற்க வேண்டாம் என அந்த நாட்டு பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளது.

சர்வதேச அளவில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தை விரும்பும் நாடாக உள்ளது. இந்தச் சூழலில், சர்வதேச அளவில் எந்த இடத்திலும் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் காக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது.

தெற்காசியாவின் தலைமை நாடாக இந்தியா விளங்குகிறது. இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் புரிந்தோரைத் தண்டிப்பதற்கு சுதந்திரமான பன்னாட்டு அமைப்பை ஏற்படுத்தும் கருத்தை ஏற்கச் செய்யும் வகையில் இலங்கை நாட்டினர் மீது மிகுந்த செல்வாக்கை வெளிப்படுத்தும் தன்னிகரற்ற நிலையில் இந்தியா உள்ளது.

மாற்று இடம்: காமன்வெல்த் மாநாட்டுக் கூட்டத்தை நடத்துவதற்கு, மாற்று இடம் ஒன்றை யோசிப்பதற்கு இன்னமும் கால அவகாசம் உள்ளது.   காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் இடம் மற்றொரு நாட்டிற்கு மாற்றப்பட வேண்டும் எனக் கேட்பதற்கு இந்தியா இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியா இந்த அறிவார்ந்த முயற்சியை மேற்கொண்டால், காமன்வெல்த் உறுப்பு நாடுகளிடையே பெருத்த ஆதரவு கிடைக்கும். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் கூட்டத்தில் இந்தியாவின் தரப்பிலிருந்து உயர்நிலையில் உள்ள அதிகாரிகள் கலந்து கொள்வது அல்லது ஈடுபடுவது என்பது அந்த நாட்டு அரசை ஊக்கப்படுத்துவதாக அமைவதோடு மட்டுமின்றி, மிகவும் உணர்வுப்பூர்வமான இந்தப் பிரச்னையில் தமிழகத்தில் உள்ள மக்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும் ஆத்திரம் கொள்ளச் செய்துவிடும்.

எனவே, வரும் நவம்பர் 15 முதல் 17 வரை கொழும்பு நகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் கூட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டாம். அதில் கலந்துகொள்ள உத்தேசித்துள்ள தலைவர்கள் அதிலிருந்து பின்வாங்க வேண்டும் என்றும் தங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதன் மூலம், இலங்கையில்  உள்ள துரதிருஷ்டமிக்க, சுரண்டப்பட்ட சிறுபான்மை தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கும், இலங்கை மீது அழுத்தம் கொடுக்கவும் முடியும்.

இவ்வாறு செய்வதன் மூலம் தமிழகம் மற்றும் உலகெங்கிலும் வாழும் பல இலட்சம் தமிழ் மக்களின் உணர்வுகளையும், பரஸ்பர சார்பு நிலையையும் இந்தியா தெளிவுபடுத்துதோடு, இலங்கைத் தமிழர்கள் மீது சிங்களர்கள் அத்துமீறுகிற வகையில் அவர்களுக்கு கொடுமை இழைக்க வேண்டுமென்ற உணர்வு அவர்களிடையே நிலவுவதைத் தணிக்கும் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Leave a Reply