ஈழ நாட்டை நாம் தற்போது ஒரு கனவாக சுருக்கி விட்டோம்: இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ ஆணவப் பேச்சு

mahinda-rajapaksha.இலங்கையின் ஒரு பகுதியாக இருந்த ஈழ நாட்டை, இப்போது தாம் ஒரு கனவாகச் சுருக்கி விட்டதாக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போயகலவில் உள்ள விஜயபா இலகு காலாட்படைப்பிரிவின் தலைமையகத்தில் 22.03.2013 நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

2009-ற்கு முன்னர் இந்த நாட்டின் ஒரு பகுதி, ஈழப் பிராந்தியம் என்று அடையாளப்படுத்தப்பட்டது. போர் நிறுத்த உடன்பாடு கூட அதற்கு ஒப்புதல் அளித்திருந்தது. அனைத்துலக சமூகத்தினால் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை நாம் 2008 -ல் முடிவுக்குக் கொண்டுவராது போயிருந்தால், இன்று இந்த நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும்?

அவர்கள் விரும்பியபடி, அனைத்துலக சமூகத்தின் உத்தரவாதத்துடன், போர் நிறுத்த உடன்பாட்டைப் பயன் படுத்தி இந்த நாடு இரண்டாகப் பிளவுபட்டிருக்கும். ஈழ நாட்டை நாம் தற்போது ஒரு கனவாக சுருக்கி விட்டோம். அதற்காக அவர்கள் இப்போது எம்மைப் பழிவாங்க நினைக்கிறார்கள்.

தீவிரவாதிகளுக்கு எதிராக மனிதாபிமானப் போரைத் தொடங்க முடிவு செய்த போது, நடவடிக்கையின் வெற்றியைத் தொடர்ந்து ஏற்படக் கூடிய தாக்கங்கள், அதன் விளைவுகளை நாம் நன்றாகவே அறிந்திருந்தோம். உங்களின் மொழியில் விளக்குவதென்றால், எதிரிக்கு எதிராக எல்லா முனைகளிலும் அதிர்ச்சித் தாக்குதலை நடத்துவது முக்கியம். போர் வெற்றியின் பின்னர், சனல் 4 போன்ற தொலைக்காட்சிகள், பொய்யான குற்றச்சாட்டுகளுடன் இதுபோன்ற அதிர்ச்சித் தாக்குதலை எம்மீது நடத்த முனைகின்றன.

வடக்கில் மனிதாபிமானப் போரின் போது, மற்றைய நாடுகளைப் போல ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. இந்தத் தாக்குதல்கள் எமக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. இந்தத் தாக்குதல்களுக்கு நாம் அடிபணியப் போவதில்லை இவ்வாறு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ  கூறியுள்ளார்.

Leave a Reply