இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பசுமை தாயகம் அறிக்கை தாக்கல்: டாக்டர் ராமதாஸ் தகவல்

Ramadasஇலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பசுமை தாயகம் அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் 1 1/2 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அவனது கூட்டாளிகள் மீது போர்குற்ற விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரும் தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவும் கடந்த ஆண்டு தாக்கல் செய்ததின் தொடர்ச்சியான நடைமுறை தீர்மானத்தையே தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் ஐ.நா. அமைப்பால் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பசுமைத்தாயகம் அறக்கட்டளை சார்பில், இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரும் அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

என்னால் நிறுவப்பட்ட அமைப்பான பசுமைத்தாயகம், கடந்த 2009-ம் ஆண்டிலிருந்தே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற இலங்கை அரசுக்கு எதிரான காலமுறை விசாரணையின் போது பசுமைத்தாயகத்தின் சார்பில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பசுமைத் தாயகத்தின் செயலாளர் இர.அருள் ஆகியோர் பங்கேற்றனர்.

ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பசுமைத் தாயகத்தின் பிரதிநிதிகளால் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உரையாற்றவும், அறிக்கைத் தாக்கல் செய்யவும் முடியும். அதன்படி பசுமைத்தாயகம் தாக்கல் செய்துள்ள அறிக்கை மனித உரிமை ஆணையத்தின் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளரின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

பசுமைத்தாயகத்தின் அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்தும், கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டிருப்பதால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பதிலும், போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான திருத்தத்தை கொண்டு வருவதிலும் மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகளிடையே இந்த அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

தமிழகத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான பசுமை தாயகம் அதனால் முடிந்த அளவுக்கு இதை செய்துள்ளது. ஈழத்தமிழர் நலனில் அக்கறை உள்ளதாக காட்டிக்கொள்ளும் மத்திய அரசும் இதே போன்ற தீர்மானத்தைக் கொண்டுவரவேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply