ஸ்ரீரங்கப்பட்டணம் கோயில் கலசம் உடைந்து விழுந்தது : பக்தர்கள் கவலை!

-RanganathaTempleஸ்ரீரங்கப்பட்டணம் இந்தியாவின்  கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகராகும். மைசூர் நகருக்கு அருகில் அமைந்த இந்நகரம் சமய , பண்பாட்டு  வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும்.

மைசூரிலிருந்து 13 கிமீ தொலைவில் இந்நகரம் உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டிலிருந்து வெளிவரும் காவிரி 8 கிமீ பயணித்து உண்டாக்கிய தீவில் இந்நகரம் உள்ளதால் இதை தீவு நகரம் எனலாம். காவிரியில் அமைந்த தீவுகளிலேயே இது தான் பெரிய தீவு ஆகும். மைசூரை பெங்களூருடன் இணைக்கும் தொடர்     வண்டிப்பாதையும் சாலையும் இதன் ஊடாக செல்லுகின்றன.

இங்கு அமைந்த அரங்கநாதசாமி கோயிலின் காரணமாகவே இந்நகருக்கு ஸ்ரீரங்கப்பட்டணம் என்ற பெயர் ஏற்பட்டது. அரங்கநாதசாமி இங்குள்ளதால் இந்நகரம் வைணவர்களின் புனித இடமாகவும் விளங்குகிறது. இங்குள்ள அரங்கநாதசாமி கோயில் கங்க மன்னர்களால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின் வந்த இங்குள்ள அரங்கனை ஆதிரங்கன் எனவும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் எனவும் திருவரங்கத்தில் உள்ள அரங்கனை அந்தியரங்கன் எனவும் அழைப்பர்.

இப்படி வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீரங்கப்பட்டணம் ரங்கநாதசுவாமி கோயில் ராஜகோபுரத்தில் இருந்த ஒரு தங்க கலசம் 01.03.2013 அன்று உடைந்து விழுந்தது. இது பக்தர்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று கொண்ட கோயிலை புதுப்பிக்கும் பணியை தொல்பொருள் ஆய்வு கழகத்தினர் செய்து வருகின்றனர். புதுப்பிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, 60 அடி உயர ராஜகோபுரத்தின் உச்சியில் நிலை நிறுத்தியுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட ஐந்து கலசங்களில் ஒன்று திடீரென உடைந்து விழுந்தது.

அதை பார்த்த தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆயிரம் ஆண்டு பழமையான கோயில் என்பதால், ராஜகோபுரத்தில் விரிசல் விழுந்திருந்தது. அதை சீரமைத்து வருகிறோம். ராஜகோபுரத்தில் நிறுத்தியுள்ள தங்க முலாம் பூசபட்ட கலசங்களை மர கட்டையை சீவி பதித்துள்ளனர். அது சிதிலமடைந்ததால், கலசம் தனியாக கழண்டு விட்டது. மற்றப்படி ராஜகோபுரத்திற்கு எந்த பாதிப்புமில்லை என்று தெரிவித்தனர்.

இருப்பினும் கோயில் கலசம் விழுந்துள்ளது பக்தர்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (02.03.2013) சனிக்கிழமை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். கலசம் விழுந்த செய்தியால்  கவலை அடைந்தனர்.

கடந்த 15.02.2013 அன்று  திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் உற்சவத்தில் மாசி 3-ம் திருநாளான  அம்மா மண்டபம் மண்டப படி அன்று காலை 8 மணியளவில் உற்சவம் பெருமாள் வீதி உலா சென்ற போது,  மங்கம்மா நகர் அருகே  ஆம்புலன்ஸ் ஒன்றில் இறந்தவர் சடலம் எதிர் கொண்டு வந்ததால்,  பெருமாளை மறுபடியும் கோவிலுக்கு  எடுத்து சென்று திருமஞ்சனம் செய்து, அன்று பகல் 02.30 மணியளவில் யாகசாலை ஹோம ஆவர்த்தி செய்து மறுபடியும் உற்சவத்திற்கு தயார் செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply