நம்பிக்கை தரும் கனடியப் பிரதமரின் உறுதியான உரையும், உறுதியில்லாத இந்திய அரசின் நிலைப்பாடும்!

Manmohan-Singh-Steven-Harperஉலக அரசியல் அரங்கில் அக்கறையுள்ளவர்களின் பார்வை இப்போது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரின்பால் திரும்பியுள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது. மனித உரிமைகள் என்று வந்தாலே இலங்கையின் போர்க்குற்றம் பற்றிய கவன ஈர்ப்பே அதிக முக்கியத்துவம் பெறுவது வழமையாகி விட்டது.

கடந்த வருட மார்ச் மாதமும் இதே மாதிரியான பரபரப்பு உலக அரங்கில் காணப்பட்டது. இலங்கை மேல் குற்றப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று அமெரிக்கா சொல்லி வந்த போதும், அதை எந்த நாடு கொண்டுவரும் என்ற பரபரப்பும், அது எவ்வளவு தூரம் பாரதூரமானதாக அமையும் என்பதும் கடைசி நேரம் வரை மர்மமாகவே இருந்தது.

இறுதியில் அமெரிகாவே அதை கொண்டு வந்தது. வேறு ஒரு நாட்டிடம் அதை ஒப்படைத்தால் தோற்கடிக்கப்படக் கூடிய அளவுக்கு இலங்கை அரசின் பிரச்சாரம் அன்று வலுப்பெற்றிருந்தது.

அதனால்தான் அமெரிக்க அரசு தானே அதை கையில் எடுத்தது. பலதரப்பட்ட அழுத்தம் காரணமாக தவிர்க்க முடியாத நிலையில் இந்தியாவும் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. அதனால் பிரேரணையும் வெற்றி பெற்றது. இதுவே கடந்த வருடத்தின் நிலைமை.

canada indiaஇந்த வருடம் இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் எந்த அளவுக்கு மாற்றம் தெரிகிறதென்றால், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தானே முன்வைக்கப் போவதாக அமெரிக்கா முன்கூட்டியே அறிவித்து விட்டதுதான் இலங்கை சார்பானவர்களுக்கு நெருக்கடியை கொடுத்திருந்தது.

குற்றச்சாட்டு நகலையும் கூட்டத் தொடருக்கு முன்பாகவே அமெரிகாக வெளியிட்டு விட்டது. இலங்கை அரசுக்கும், இந்தியா போன்ற இலங்கையின் ஆதரவு நாடுகளுக்கும் தமது உறுதியான நிலைப்பாட்டை முன்னறிவித்தலாக விடுக்கும் விதத்திலேயே இம்முறை அமெரிக்காவின் அணுகுமுறை அமைந்திருந்தது.

கடந்த வருடம் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் போது இறுதி நேரத்தில் இந்தியா விடாப்பிடியாக நின்று செய்த திருத்தங்கள் போன்று இம்முறை இடம் பெற்று விடக் கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருப்பதாக தெரிகிறது.

இலங்கை அரசு தமது சர்வாதிகாரப் போக்கில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல நாடுகளின் அரசுத் தலைவர்களாலும், பிரதானிகளாலும் விடுக்கப்படுகின்ற போதும், அவை எதையுமே இலங்கை அரசு கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை.

கடந்த வருடம் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட மென்போக்கிலான தீர்மானத்தைக்கூட மதித்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டின் வெளிப்பாடாகவே அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிக்கும் முடிவுக்கு மேற்குலக நாடுகள் வந்துள்ளன.

அதற்கு வலுச் சேர்க்கும் விதமாக சனல்-4 வெளியிட்டிருக்கும் பாலச்சந்திரனின் படுகொலை, மற்றும் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் போன்ற ஆதாரங்கள் அமைந்துள்ளன.

இலங்கை அரச படைகள் செய்த போர் குற்றம் சம்பந்தமாக எவ்வளவுதான் ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்ற போதும், அவை எல்லாவற்றையும் மறுத்து வரும் இலங்கை அரசு, எதைப்பற்றியும் சரிவர ஆராயாமலே எழுந்தமானத்துக்கு மறுத்து அறிக்கை விடுவதன் மூலம் தாங்கள் செய்த குற்றங்களை தாங்களே இலகுவில் வெளிக்காட்டி விடுகிறார்கள்.

அதற்கு உதாரணமாக, வடக்கில் இடம் பெற்ற எதிர்க்கட்சிகளின் காணி அபகரிப்பு சம்பந்தமான போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற படைத்தரப்பை பிடித்து மக்கள் பொலிசாரிடம் கையளித்த போதும், அப்படி யாரும் தம்மிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று காவல்துறை பேச்சாளர் சொன்னதோடு, வெளிவந்த படங்கள் கணனி தொழில் நுட்பத்தின் மூலம் புகுத்தப்பட்டவை என்று சொல்லியிருந்தார்.

மக்கள் பிரதிநிதிகள், கல்விமான்கள் முன்னிலையில் நடந்த ஒரு சம்பவத்தையே திரிவு படுத்துபவர்கள், பாலச்சந்திரனின் கொலையையா ஒத்துக்கொள்ளப் போகிறார்கள்?

மனித உரிமைகள் பேரவையில் இம்முறை இந்தியா என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கடந்த முறையைப்போல் இம்முறையும் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இலங்கையிடம் எவ்வளவுதான் அடி வாங்கி அவமானப்பட்டாலும் முதுகைக் காட்டியே பழகிப்போய் விட்டது.

இந்தியாவுக்கு. (ராஜீவ் காந்தியை துப்பாக்கிப் பிடியால் அடித்ததை, மகிந்தவுக்கு முதுகு சொறிய வந்துள்ள சுப்பிரமணியம் சுவாமி மட்டுமல்ல, பணிந்து போகும் இந்தியாவும் மறந்து விட்டது) தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல், இந்தியாவின் எதிர்க்கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து இலங்கை அரசின் கொடூரத்துக்கு எதிராக இரு அவைகளிலும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனல், இந்தியாவின் ஜனாதிபதியும் (முன்னாள் வெளியுறவு அமைச்சரும்) இன்றைய வெளியுறவு அமைச்சரான சல்மான் குர்ஷித் அவர்களும், மக்களவை உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு சரியான முறையில் பதிலளிக்காமல், இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தபடியே, அவையினரை சமாளிக்கும் விதத்தில் உரையாற்றியிருந்தார்கள்.

கொலைகளுக்கு காரணமானவர்களிடமும், அதற்கு துணை நின்றவர்களிடமும் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்? மக்களின் உணர்வலைகள் இலங்கைக்கு எதிராக இருப்பதால், தேர்தலை எதிர் கொள்ள வேண்டிய ஒரு நிலையில் இலங்கைக்கு எதிரான ஒரு முடிவை இம்முறையும் இந்தியா எடுக்கக்கூடும். இலங்கைக்கு சார்பான பல நாடுகள் சபையில் இல்லாத நிலையில் இந்தியா நடுநிலை வகித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

India-Canada-1இந்தியாவை நம்பியே நாம் சீரழிந்த போதும், கனடியத் தமிழரைப் பொறுத்தவரை பிரதமர் ஹாப்பரின் இலங்கைக்கு எதிரான பாராளுமன்ற உரைதான் எம் எல்லோருக்கும் மன ஆறுதலை தருகிறது. ஏதாவது ஒரு வகையில் ஈழத் தமிழருக்கு ஒரு விடிவு பிறக்க வேண்டுமானால் எமது பிரதமரிடம் எற்பட்டுள்ள மனத்தெளிவு ஏனைய நாட்டுத் தலைவர்களிடமும் ஏற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு!

க.ரவீந்திரநாதன் (செந்தாமரை)

 கனடியத் தமிழர்

Leave a Reply