ஐதராபாத் குண்டு வெடிப்புக்கு அமோனியம் நைட்ரேட் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது : மாநகர காவல்துறை ஆணையாளர் அனுராக் சர்மா தகவல்

Newswala-i-Police_Commissioner_Anurag_Sharma_ஐதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாநகர காவல்துறை ஆணையாளர் அனுராக் சர்மா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஐதராபாத் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள். குண்டுவெடிப்பு பற்றி தகவல் தருவோருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை தேசிய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் தீவிரவாதிகள ஊடுருவலாம் என்று உளவுத்துறை அளித்த தகவலை நாங்கள் அலட்சியம் செய்யவில்லை. தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என கடந்த 15-ம் தேதி தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஐதராபாத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை என்று கூறுவது தவறு. அந்த கேமராக்கள் செயல்பாட்டில்தான் இருந்தன. அவற்றில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். குண்டுவெடிப்பை நேரில் பார்த்த சாட்சிகளிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த குண்டுவெடிப்புக்கு அமோனியம் நைட்ரேட் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் டைமருடன் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை தொடர்பான தகவல்களை தற்போதைய சூழலில் வெளியிட முடியாது இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply