காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்!

tn.cmமத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இன்று (22.02.2013) அவர் எழுதியுள்ள கடிதத்தில், 5.2.2007 அன்று காவிரி நடுவர் மன்றம் வெளியிட்ட இறுதித் தீர்ப்பை, 19.2.2013 அன்று மத்திய அரசிதழில் வெளியிட்டதற்கு மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான தங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

5.2.2007ல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயம் அளித்த இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று, மத்திய நீர்வளத்துறைக்கு தொடர்ந்து நான் கோரிக்கை விடுத்து வந்திருப்பதை நீங்கள் நினைவுகூர வேண்டும்.
மேலும், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பாயத்தின் முன் நிலுவையில் உள்ள பல்வேறு பொது வழக்குகள் குறித்து தீர்ப்பதற்கு காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றை அமைக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததும் நினைவிருக்கலாம்.

இப்போது இந்திய அரசு, நீர்வளத் துறை அமைச்சகம் மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இது, இந்த வழக்குகள் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் ஒரு தீர்வினைக் கொடுக்கும்.
மேலும், 1956ம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டம் பிரிவு 6(2)ன்படி, அரசிதழில் வெளியிடப்படும் தீர்ப்பாயத்தின் முடிவானது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணையானது.

இதை மனதில் கொண்டு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை அமல்படுத்தவும், கண்காணிக்கவும், செயலாக்கவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி அமைக்கவும் அதன் பங்கினை சரியாகச் செய்யவும் உத்தரவிட வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில், நான் தங்களிடம் கேட்டுக் கொள்வது… மத்திய நீர்வளத் துறை அமைச்சகமானது, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை கமிட்டி ஆகியவற்றை உருவாக்கி, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை அமல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிப் படுத்த வேண்டும் என்பதுதான்.
இந்த விவகாரத்தில் உடனடியாக நல்ல பதிலை அளித்ததற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply