கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் : தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

pr220213aவளர்ந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையினை சமாளிக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா சீரிய முயற்சியினால் இந்தியாவிலேயே முதல் முறையாக நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் திறனுடைய கடல் நீரைக் குடி நீராக்கும் நிலையம் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டு நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது.

பொதுத்துறை நிறுவனம் சார்பாக சென்னைக் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர கற்று வாரியம் மூலம் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறனுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் இரண்டாவது நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், சூளேரிக்காடு, நெம்மேலியில் 871 கோடியே 24 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 40.05 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் மூலம் நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் கடல்நீர் எடுக்கப்பட்டு, 100 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு மீதமுள்ள 165 மில்லியன் லிட்டர் கடல்நீர் மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்லப்படும். கடல் நீரைப் பெறுவதற்காக 1600 மி.மீ. விட்டமுள்ள உயர் அழுத்த பாலிஎத்திலின் குழாய்கள் கடலினுள் சுமார் 1000 மீட்டர் கடல் படுகையில் புதைக்கப்பட்டுள்ளது.

pr220213cசுத்திகரிக்கப்பட்ட பின் மீதமுள்ள நீரினை கடலினுள் செலுத்த 1200 மி.மீ. விட்டமுள்ள உயர் அழுத்த பாலிஎத்திலின் குழாய்கள் சுமார் 740 மீட்டர் கடல் படுகையில் புதைக்கப்பட்டுள்ளது. கடல்நீரில் உள்ள கசடுகள் மற்றும் நுண்ணுயிர்களை அகற்ற முதலில் இஸ்ரேல் நாட்டில் இருந்து பெறப்பட்ட தட்டு வடிகட்டி மற்றும் நெதர்லாந்து நாட்டில் இருந்து பெறப்பட்ட நுண் சவ்வூடு வடிகட்டிகள் மூலம் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் பெறப்பட்ட சுத்தமான கடல்நீரின் உப்பு தன்மையை நீக்க ஜப்பான் நாட்டில் இருந்து பெறப்பட்ட எதிர் மறை சவ்வூடு பரவுதல் மூலம் கடல்நீர் செலுத்தப்படுகிறது.

எதிர்மரை சவ்வூடு பரவுதல் நடைபெறும் போது ஏற்படும் மின்சார செலவினத்தை அமெரிக்க நாட்டில் இருந்து பெறப்பட்ட உபகரணம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் நீர் செரிவூட்டப்பட்டு தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது. இந்த தொட்டிகளிலிருந்து பெறப்படும் குடிநீர் தென் சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூர் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளாகத்தைச் சார்ந்த பகுதிகளுக்கு குழாய் மற்றும் நீரேற்று நிலையங்கள் வாயிலாக வழங்கப்படும்.

நெம்மேலியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் நீரேற்றும் நிலையங்கள் திறப்பு விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதா விழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் நீரேற்றும் நிலையங்களின் முப்பரிமாண மாதிரியை பார்வையிட்டார். அப்போது, முதலமைச்சருக்கு கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்படும் விதம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் நீரேற்றும் நிலையங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் நீரேற்றும் நிலையங்களை நேரில் பார்வையிட்டார். இப்புதிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மூலம் இப்பகுதியில் வசிக்கும் சுமார் 15 லட்சம் மக்கள் பயனடைவார்கள். விழாவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர், அரசு உயர் அலுவலர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply