அரசிதழில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு! இதுதான் மிகப்பெரிய சாதனை! – தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மகிழ்ச்சி

tn.cm JAYAA_முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று நீதிமன்றத்தில் இருந்து இரண்டு மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்துள்ளன. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு இன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 22 ஆண்டு காலம் நான் இடைவிடாது நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி. இந்த செய்தி எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியை அளிக்கிறது.

1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி முதன்முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றேன். அதற்கு அடுத்த நாளான 25-ந் தேதி தனது காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு வெளியானது. ஆனால் கர்நாடக அரசு அதை செயலற்றுப் போகச் செய்யும் வகையில், கர்நாடக சட்டமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றியது. எனது ஆணையின்படி அதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது. அப்போது கர்நாடக சட்டமன்றம் கொண்டு வந்த சட்டம் இந்திய அரசியல் சாசனப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இடைக்கால ஆணையை அரசிதழில் வெளியிட அப்போதும் மத்திய அரசு சுணக்கம் காட்டியது. பின்னர் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்தது. அதையும் மத்திய அரசு வெளியிடவில்லை. 1991-ம் ஆண்டிலிருந்து காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதி தீர்ப்பு எதையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. இத்தீர்ப்பை அரசிதழில் வெளியிடவேண்டும் என்று எண்ணற்ற முறை மத்திய அரசை, தமிழக அரசு வலியுத்தியும் அதை வெளியிடவில்லை.

1993-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்தக்கோரி சென்னை மெரீனா கடற்கரையில் நான் 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த சுக்லா, இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்த குழு அமைக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பிறகும் பிரச்சினை தீரவில்லை. இயற்கையாக மழை வந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.

கர்நாடகத்தில் உள்ள 4 அணைகளும் நிறைந்த பிறகே உபரி நீரை மட்டுமே தமிழகத்திற்கு வழங்கினார்கள். திரும்பத் திரும்ப இந்த பிரச்சினையை எடுத்து வைத்ததன் விளைவாக காவிரி நதிநீர் ஆணையம், காவிரி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டன. 9 ஆண்டுகளாக நதிநீர் ஆணையம் கூட்டப்படவில்லை. நான் மீண்டும் தற்போது ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் காவிரி ஆணையத்தை கூட்ட வேண்டும் என்று மத்திய அரசை பலமுறை வலியுறுத்தினேன். பலன் கிடைக்காததால் வேறு வழியின்றி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். 9 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நதிநீர் ஆணையம் கூட்டப்பட்டது. என்றாலும் ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் மதிக்கவில்லை. இடைக்கால ஆணை இப்போது இல்லை. இறுதி ஆணை அரசிதழில் வெளியிடவில்லை.

எனவே தண்ணீர் தரமாட்டோம் என கர்நாடகம் சொல்லி வந்தது. இருப்பினும் முயற்சி செய்து போராடி போராடி இன்று அரசிதழில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை உச்சநீதிமன்ற உத்தரவால் மத்திய அரசு வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இது மகத்தான வெற்றி. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 19-ந் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு, அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அந்த நகல் எனக்கு கிடைத்துள்ளது. இது, எனது தனிப்பட்ட வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றுதான் சொல்வேன்.

30 ஆண்டுகால பொதுவாழ்வில் இன்றுதான் சாதனை புரிந்ததாக எனக்கு மனநிறைவு ஏற்பட்டுள்ளது. எத்தனைபேர் என்னை புகழ்ந்தாலும் நான் சாதனை செய்ததாக இதுவரை நினைக்கவில்லை. இதுதான் மிகப்பெரிய சாதனை என்ற மனநிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. இது எனக்கும், எனது அரசுக்கும் கிடைத்த வெற்றி. காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கிடைத்திருக்கிறது.

இந்த தீர்ப்பு அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளதால் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற கட்டாயம் கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இனி தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுக்க முடியாது. பருவ மழை நன்றாக பெய்யும் காலத்தில் முழு அளவு தண்ணீரை அவர்கள் தந்தாக வேண்டும். மழை குறைவாக இருந்தாலும் பங்கீட்டின்படி நமக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரை தந்தாக வேண்டும். எதிர்காலத்தில் தண்ணீரை கேட்டுப் பெறவேண்டிய அவசியம் இருக்காது. அரசிதழில் தீர்ப்பு வெளியிடப்பட்டது கர்நாடக அரசை கட்டுப்படுத்தும். மற்றொரு தீர்ப்பும் வந்துள்ளது.

ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள புதிய கட்டிடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்காக தேசிய பசுமை தீர்ப்பாணையத்தில் தொடரப்பட்ட வழக்கும் வெற்றி பெற்றிருக்கிறது. அங்கு மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலிலேயே அங்கு மருத்துவமனை அமைக்கும் பணி தொடங்கும். இதுவும் மகத்தான வெற்றி.  இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டி முடிந்ததும் நிருபர் ஒருவர் குறுக்கிட்டு, “யார் கொடுத்த நெருக்கடியால் காவிரி தீர்ப்பு அரசிதழில் வெளியானதாக கருதுகிறீர்கள்” என்று கேட்டனர். அதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளிக்கையில், “சுப்ரீம் கோர்ட்டு கொடுத்த நெருக்கடிதான் காரணம். இதற்காக சுப்ரீம்கோர்ட்டுக்கு என் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Leave a Reply