தாமதம் ஆகும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் புகாரை பதிவு செய்ய மறுக்கும் போலீசாரை உடனே ‘சஸ்பெண்டு’ செய்ய வேண்டும்: மத்திய உள்துறை செயலாளர் பேச்சு

டெல்லியில் நடைபெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தில், மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் பேசுகையில் கூறியதாவது:-
போலீசார் அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். நாட்டில், புகார் கொடுப்பதற்கோ, ஏற்கனவே கொடுத்த புகாரின் நிலையை தெரிந்துகொள்வதற்கோ போலீஸ் நிலையங்களுக்கு செல்வது பொதுமக்களுக்கு வேதனையான அனுபவமாக உள்ளது.
அதிலும், பெண்கள், நலிந்த பிரிவினர் போன்றோர் உள்ளூர் எம்.எல்.ஏ.க்களை கூட்டிச் செல்லாவிட்டால், புகாரின் நிலைமையை தெரிந்து கொள்வது இயலாத காரியமாக உள்ளது. இந்த நிலைமை மாற வேண்டும். புகாரை பதிவு செய்ய மறுப்பது சட்டத்தை மீறும் செயல். எனவே, புகாரை பதிவு செய்ய மறுக்கும் போலீஸ்காரரை உடனடியாக ‘சஸ்பெண்டு’ செய்ய வேண்டும்.
அதில் தயக்கம் காட்டக்கூடாது. பெண்கள், நலிந்த பிரிவினர் போன்றோர் எந்த சிரமமும் இல்லாமல் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகாரை பதிவு செய்யும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மானபங்கம் போன்ற வழக்குகளில் போலீசாரிடம் விளக்கி சொல்ல பயந்து கொண்டு, போலீஸ் நிலையம் செல்வதை தவிர்க்கும் சூழ்நிலை நிலவுகிறது.
இது மாற வேண்டும். போலீஸ் துறையில் பெண்களின் எண்ணிக்கையை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும். போலீஸ் நிலையங்களில் பெண் போலீசார் அதிகமாக இருந்தால்தான், பெண்கள் தயக்கமின்றி போலீஸ் நிலையத்துக்கு வருவார்கள். ஒரு வழக்கின் விசாரணையை முடிக்க காலவரையறை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
குற்றவியல் நடைமுறை சட்டப்படி, ஒரு வழக்கு விசாரணை, 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். ஏனென்றால், தாமதம் ஆகும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். வழக்கு தாமதம் ஆனால், சாட்சிகள் சாட்சி அளிக்க முன்வர மாட்டார்கள். இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால், விசாரணையை விரைவாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

எஸ்.சதிஸ்சர்மா

Leave a Reply