இலங்கையில் நடந்த இறுதி யுத்தம் – உயிர்கள் இழப்பு – உடமைகள் பறிப்பு – உண்மைகளை மறைத்த ஐ.நா அதிகாரிகள்!

மகிந்த ராஷபட்சேயுடன்  ஜோன் ஹோம்ஸ்

மகிந்த ராஷபட்சேயுடன் பான் கி மூன்

          ஐக்கிய நாடுகளின் சபை அதிகாரிகளால் பத்திரிகையாளர் மாநாடுகளில் வெளியிடப்பட்ட அறிக்கைகள், விக்கிலீக்கின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட உண்மைகள், படுகொலைக் களத்தில் பணியாற்றிய 12 ஐ. நா அதிகாரிகளின் வாக்கு மூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, இலங்கையில் வன்னி முள்ளிவாய்க்கால் தமிழர்கள் படுகொலைகள் மற்றும் யுத்த அழிவுகளை  ஐ. நா அதிகாரிகள் திட்டமிட்டு மறைத்திருப்பது, தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது

பான் கி மூன் உடன் ஜோன் ஹோம்ஸ்

                                

மகிந்த ராஷபட்சேயுடன்  ஜோன் ஹோம்ஸ்

விஜய் நம்பியார்

          மகிந்த ராஷபட்சேயுடன்  ஜோன் ஹோம்ஸ் ஆலோசனை

ஜோன் ஹோம்ஸ்

பாரிய மனிதப்படுகொலைகளை மறைப்பதற்காகத் திரும்பத் திரும்ப சிங்கள அரசாங்கத்தினது “போர் சூனியப் பிரதேசம் மீது கனரக ஆயுதங்களைப் பாவிக்க மாட்டோம்” எனும் பொய்யை முழுமையாக வேண்டுமென்றே நம்பியது மட்டுமல்லாமல், வேண்டுமென்றே வன்னிக் கொலைக்களத்தில் நடந்த படுகொலைகளை மறைத்தது,          அங்கே நடைபெற்ற படுகொலைகளின் எண்ணிக்கை என்று சிங்கள அரசு சொன்னதையே பத்திரிக்கையாளர்களுக்கும் சொல்லியது போன்ற அந்நாள் ஐ. நா வின் மனிதாபிமான, இடர் நிவாரண பணிப்பாளராக விளங்கிய ஜோன் ஹோம்ஸின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அந்நாள் பதுகாப்புச்சபைத் தலைவரான யுக்கியோ டகாசு கூறிய ஐ. நா வின் ரகசியத் திட்டமான “பலமுறை பேச்சுவார்த்தைகளைக் குழப்பிய பயங்கரவாதிகளான புலிகளை முற்றாக அழிப்பது, அதன் பின்னரே பொதுமக்கள் அழிவுகள் பற்றிச் சிந்திப்பது” என்பதன் அடிப்படையிலேயே அவர் செயற்பட்டிருக்கிறார் என்று தெளிவாகிறது.          பாரிய அமைப்பு ரீதியான தவறுகளை ஐ. நா இழைத்திருப்பதன் மூலம் போரின் இறுதிக்கட்டத்தில் ஒரு சில மாதங்களில் மட்டுமே 40,000 இற்கு மேலான தமிழர்கள் கொல்லப்பட்டக் காரணமாக அது இருந்திருக்கிறது என்று ஐ. நா வின் உள்ளக விசாரணைக் குழுவொன்றே அண்மையில் ஐ. நாவை குற்றம் சாட்டியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த அறிக்கைய விமர்சித்திருக்கும் ஜோன் ஹோம்ஸ், ஐ. நா வின் அன்றைய நடவடிக்கைகளை நியாயப்படுத்தியிருப்பதுடன், அன்றைய இக்கட்டான காலகட்டத்தில் ஐ. நா இதைவிட வேறு வழியில் செயற்பட்டிருக்க முடியாது என்று கூறியிருக்கிறார். “நாம் எமது நடவடிக்கைகளை மாற்றியிருந்தால், சிறிலங்கா அரசும் தனது நடவடிக்கைகளை மாற்றியிருக்கும், முடிவுகள் வேறு விதமாக இருந்திருக்கும், ஆகவே தான் நாம் அப்படிச் செய்தோம்” என்று கூறியிருக்கிறார்.          அபோதைய ஐ. நா பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவராக இருந்த யுக்கியோ டகாசு கூறுகையில், ” மனித அவலம் என்பது ஒரு பிரச்சினையில் சிறிய பகுதி மட்டுமே. ஆனால் அதற்குமப்பால் நாம் அரசியல், பாதுகாப்பு நிலமை பற்றிச் சிந்திக்க வேண்டும். நிலமை மிகவும் சிக்கலானது, பலமுறை கொண்டுவரப்பட்ட யுத்த நிறுத்தங்களைப் பயங்கரவாத இயக்கமான புலிகள் முறித்திருக்கிறார்கள், யுத்த நிறுத்தங்களைப் பாவித்து புதிய இராணுவ தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்க நாம் அரசாங்கத்தைப் பார்த்து யுத்தத்தை நிறுத்துங்கள் என்று கோருவது நியாயமற்றது” ஆகவே தான் நாம் வாளாவிருந்தோம் என்று சொல்கிறார்.          பாதுகாப்புச் சபை தலைவரின் அறிக்கைக்குப் பின்னர் வந்த 5 மாதங்களிலும், ஐ. நா நடந்துகொண்ட விதத்தினையும், அதற்கேற்றாப்போல் அவ்வப்போது வெளிவந்த ஜோன் ஹோம்சின் அறிக்கைகளையும் பார்க்கும்போது ஐ. நா புலிகளை முற்றாக அழிப்பதையே விரும்பியிருந்தது என்பது தெளிவாகிறது. இந்தத் திட்டத்தை ஐ. நா வின் இரு உயரதிகாரிகளான ஜோன் ஹோம்ஸும், விஜய் நம்பியாரும் நியூயோக்கில் இருந்து அமுல்ப்படுத்த, களத்திலிருந்த உள்ளூர் அதிகாரிகளான நீல் பூனே, பிலிப்பே டுவாமெல்லே, அமின் அவாட், அண்டி புறூக்ஸ் ஆகியோர் பாரிய படுகொலைகளுக்கான ராசதந்திர பாதுகாப்பையும், பட்டினிச் சாவுக்கான முழு அளவிலான மறைப்பையும் வழங்கிக் கொண்டிருந்தனர்.          மாசி மாதத்திலிருந்து மே மாதம் வரையிலான காலப்பகுதியில் ஜோ ஹோம்ஸ் ஐ. நா சபையில் ஐந்து தடவை போர் பற்றிய பத்திரிகையாளர் மாநாடுகளை நடத்தியிருந்ததோடு, பல முறை மக்கள் அழிவுகள் பற்றிய கேள்விகளுக்கும் உள்ளாக்கப்பட்டார். இன்னர் சிட்டிப் பிரெஸ் வெளியிட்ட ஐ. நாவின் ரகசியத் தகவல் குறிப்பொன்றின் மூலம் மார்ச் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் மட்டும் சிறிலங்கா இராணுவத்தின் செல்தாக்குதலினால் கொல்லப்பட்ட 2800 பொது மக்களின் எண்ணிக்கை பற்றி ஐ. நா வுக்கு உறுதியாகத் தெரிந்திருந்தும் கூட, பத்திரிகையாளர் பொது மக்கள் அழிவுகள் பற்றிக் கேட்ட போது எந்த வித பதிலையும் அவர் கூற மறுத்து விட்டார்.          “உங்களால் சரியான பொதுமக்கள் இறப்பு எண்ணிக்கையைச் சொல்ல முடியாவிட்டாலும் பரவாயில்லை, அண்ணளவாக எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள், அதன் மூலமாவது அங்கே நடக்கும் மனித அவலத்தை உலகின் பார்வைக்குக் கொண்டுவந்து, இந்த அழிவுகர யுத்தத்தை நிறுத்தலாமே?” என்று ஒரு பிரெஞ்சுப் பத்திரிகையாளர் கேட்டதற்கும், எதுவித பதிலையும் அவர் கூறவில்லை.          ஐ. நா உள்ளக விசாரணைக் குழுவின் விசாரனை அறிக்கைப்படி, “நீங்கள் உண்மையான பொதுமக்கள் அழிவுகளை வெளியே கூறினால் அது ஐ. நா வை பாரிய சங்கடத்துக்குள் தள்ளிவிடும், ஆகவே எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் உண்மையான அழிவுகளை வெளியே சொல்லக்கூடாது” என்று ஜோன் ஹோம்ஸும், விஜய் நம்பியாரும் அந்நாள் ஐ. நா மனிதவுரிமைக் கவுன்சிலின் தலைவரான நவிப்பிள்ளையைக் கடுமையாக நிர்ப்பந்தித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

Navi Pillay
Navi Pillay

போரின் இறுதிக் கட்டத்தில் புலிகளின் பகுதியிலிருந்த பொதுமக்களின் எண்ணிக்கை பற்றி கருத்துத் தெரிவிக்கும் போது, ஜோன் ஹோம்ஸ் தொடர்ந்தும் சிங்கள அரசு கூறிய வெறும் 70,000 எனும் எண்ணிக்கையயே மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டிருந்தார்.          ஆனால் அதே வேளை, ஐ. நா வின் வேறு அதிகாரிகளின் மதிப்பீடோ குறைந்தது 200,000 பொதுமக்களாவது அங்கிருக்கலாம் என்று கூறியிருக்க, தமிழர் தரப்புக்களோ இந்த எண்ணிக்கை 300,000 ஐயும் தாண்டும் என்று கணிப்பிட்டிருந்தன. அந் நாட்களில் கொழும்பிலிருந்து ரொபேட் பிளேக்கினால் அமெரிக்க ராசாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட செய்திகள்கூட, இந்த 300,000 என்கிற எண்ணிக்கையயே மேற்கோள்காட்டி, சிங்கள அரசு உணவை ஒரு ஆயுதமாகப் பாவித்து, புலிகளின் பின்னாலிருந்த மக்களை தம்பக்கம் இழுக்க முயன்று கொண்டிருக்கிறது என்றதும் குறிப்பிடத்தக்கது. இதற்கும் மேலாக, செய்மதிப் படங்களின் அடிப்படையில் வைத்துப் பார்த்த போது சிங்கள அரசு கூறிய 70,000 எனும் எண்ணிக்கையைக் காட்டிலும் மிக அதிகளாவான மக்கள் கூட்டம் அப்பகுதியில் இருந்தது ஐ. நா வுக்கு நன்கே தெரிந்திருந்தும் அது சிங்கள அரசு மீது உணவு மற்றும் மருந்துப் பொருள் நிவாரணங்களை அதிகப்படுத்துங்கள் என்று எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை என்பதும் உள்ளக அறிக்கை மூலம் தெரிய வந்திருக்கிறது.          இவ்வாறான ஐ. நா வின் நடவடிக்கைகளால் பல ஐ. நா அதிகாரிகள் ஜோன் ஹோம்ஸ் தலைமையிலான அமைப்பிலிருந்து விலகியதுடன், பெருமளவு மக்கள் கொல்லப்படவும், பட்டினிச் சாவை எதிர்நோக்கவும் காரணமாக இருந்த ஐ. நாவையும் கடுமையாகச் சாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.          அதுமட்டுமல்லாமல், மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டிருக்க, உள்ளூர் ஐ. நா அதிகாரிகள், மக்களுக்கு கிரிக்கெட் ஆட்ட மட்டைகளையும், பந்துகளையும் நிவாரணப் பொருட்களாக விநியோகித்தமையும் கடும் கண்டனங்களுக்கு உள்ளானது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த பொதுமக்களின் எனண்ணிக்கையை ஜோன் ஹோம்ஸ் வேண்டு மென்றே குறைத்து மதிப்பிட்டது, பின்னால் நடக்கவிருந்த பாரிய மனிதப் படுகொலைய எதிர்பார்த்துத்தான் என்பதும் இவரதும், ஐ. நா வினதும் நடவடிக்கைகள் மூலம் தெரிய வருகிறது.          எல்லாப் பத்திரிகையாளர்  மாநாடுகளிலும், சிங்கள அரசுக்குச் சார்பாக கருத்துத் தெரிவித்த ஜோன் ஹோம்ஸ், புலிகள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களைத் தம்முடன் வைத்திருப்பதால், மக்களின் இழப்புக்களுக்கு அவர்களே பொறுப்பு என்றும் தவறாமல் கூறி வந்தார்.

போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்த அனைத்து பொதுமக்கள் மட்டுமல்லாமல், போர் வலயப் பகுதிக்கு வெளியே இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கூட இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டது பற்றியும், அங்கே நடைபெற்ற இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றியும் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விகளுக்கு தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய ஜோன் ஹோம்ஸ், “அங்கிருக்கும் எல்லாப் பகுதிகளும் போரினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன, ஆகவே, இராணுவம் அப்படி நடந்து கொண்டதில் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை” என்று ராணுவத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் தவறவில்லை. உலகின் இனச் சிக்கல்களின்போது பாதிக்கப்படும் இனத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டி, அவர்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டிய அமைப்பான ஐ. நா வே ஒரு இனத்தைத் திட்டமிட்டு அழிக்கத் துணை போனதென்றால், இவ்வாறான அமைப்பொன்றின் தேவையென்ன என்கிற கேள்வியும் பலரின் மனதில் எழுகிறது.

-UTL SPECIAL TEAM

Leave a Reply