வேளாண் கடனை வசூலிப்பதற்கு கந்துவட்டிக்காரர்களைப் போல வங்கிகள் நடந்துகொள்வது ஏற்புடையது அல்ல!-  ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்.  

vaiko

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம்,  தாணிப்பாடி அடுத்த போம்பை கிராமத்தைச் சார்ந்த விவசாயி ஞானசேகரன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கொடுத்த நெருக்கடியால் உயிரிழந்துள்ளார்.

விவசாயி ஞானசேகரன்.

விவசாயி ஞானசேகரன்.

இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சாத்தனூரில் உள்ள வங்கி ஒன்றில் விவசாய கடன் திட்டத்தில் டிராக்டர் வாங்கி, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தவணைத் தொகையை முறையாகச் செலுத்தி வந்திருக்கிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்பட்ட கடும் வறட்சியால் தவணைத் தொகையைச் செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார். வங்கி நிர்வாகம் வாராக் கடன் பட்டியலில் ஞானசேகரன் பெயரைச் சேர்த்தது.

இந்நிலையில், வங்கி நிர்வாகம் கடன் தொகையை வசூலிக்கும் பொறுப்பை தனியார் முகவரிடம் ஒப்படைத்துள்ளது.

நேற்று (நவம்பர் 4) மாலை விவசாயி ஞானசேகரன் வீட்டுக்குச் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல், தாங்கள் வங்கிக் கடனை வசூலிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் என்று கூறி, டிராக்டரை ஜப்தி செய்யப்போவதாக அடாவடியாகத் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த அவர் நெல் அறுவடை முடிவடைந்ததும், இரண்டு மாதங்களில் தவணைத் தொகையைச் செலுத்துவதாகக் கூறியுள்ளார். அதனை ஏற்க மறுத்த தனியார் நிறுவன ஊழியர்கள் டிராக்டரை எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் அக்கும்பல் விவசாயி ஞானசேகரனைப் பிடித்துக் கீழே தள்ளி இருக்கிறது.

கீழே விழுந்து மயங்கிய ஞானசேகரன் உடல் நலன் பாதிக்கப்பட்டு, தாணிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று இரவு ஞானசேகரன் உயிரிழந்தார்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றுள்ள விவசாயிகள் தவணைத் தொகையை முறையாகச் செலுத்தி வரும் நிலையில், வங்கிகள் தனியார் முகவர்களை ஏவிவிடுவது தமிழகத்தில் தொடர் நிகழ்வுகள் ஆகிவிட்டன. வங்கி முகவர்களான ரௌடி கும்பல் விவசாயிகளைத் தாக்குவதும், இதுபோன்ற உயிரிழப்புகள் நேர்வதும் கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி வங்கிகளின் வாராக் கடன் ஆறு இலட்சம் கோடியைத் தாண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். ஆனால், உண்மையில் வங்கிகளின் வாராக் கடன் ரூபாய் பத்து இலட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

பெரும் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் ஏப்பம் விட்டுள்ளன. ஆனால், சாதாரண ஏழை விவசாயிக்கு கொடுத்துள்ள வேளாண் கடனை வசூலிப்பதற்கு கந்துவட்டிக்காரர்களைப் போல வங்கிகள் நடந்துகொள்வது ஏற்புடையது அல்ல.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய ஆந்திரா, தெலுங்கானா, உத்திரப்பிரதேச மாநிலங்களைப் போல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உயிரிழந்த விவசாயி ஞானசேகரன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து ஞானசேகரன் குடும்பத்துக்கு 25 இலட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ம.தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

 -ஆர்.அருண்கேசவன்.