ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பி வன்முறையை தூண்டிய மு.க.ஸ்டாலின் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: ம.நடராஜன் குற்றச்சாட்டு!

ம.நடராஜன்.

ம.நடராஜன்.

நிகழாண்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், மாணவர்கள் போராட்டம் தொடங்கியது. நல்ல நோக்கத்துக்காக மாணவர்கள் போராட்டம் தொடங்கிய நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அங்கு சென்றார்.

ஆனால், அரசியல் கட்சிகள் போராட்டத்துக்குள் நுழைய வேண்டாம் என மாணவர்கள் அவரை திருப்பிய அனுப்பிய பிறகுதான் திமுக தூண்டுதலின் பேரில் இந்தப் போராட்டத்தில் ஒரு சிலர் ஊடுருவினர். கருணாநிதி, ஸ்டாலினுடன் இருப்பவர்கள் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்தனர். மாணவர்கள் போராட்டத்தை வைத்து தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கி, ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில்தான், அறவழியில் போராடிய மாணவர்களின் உணர்வுகளை மதிக்காமல், போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ரயில் மறியல், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர். அறவழியில் நடந்து வந்த மாணவர்கள் போராட்டத்தின் போது வன்முறைக்கு வித்திட்டது தி.மு.க. தான். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பி வன்முறையை தூண்டிய ஸ்டாலின் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், போலீஸாரும் அத்துமீறியதாகவும் பல கருத்துகள் நிலவுகிறது. எதுவாக இருப்பினும் வன்முறைக்கு வித்திட்டவர்கள் மீதும், விஷமிகள் மீதும், தவறு செய்த போலீஸார் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு சட்டம் நிரந்தரமானது. இதை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சசிக்கலா கணவர் ம.நடராஜன் இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

-ஆர்.அருண்கேசவன்.