கிரிமினல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆதரவாளர்களின் வன்முறை வெறியாட்டம்!- இது ஜனநாயக நாடா? இல்லை சாமியார்கள் நாடா?

Gurmeet Ram Rahim.

கடந்த 1999-ஆம் ஆண்டு ஆசிரமத்தில் தங்கியிருந்த இரு பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அரியானா பஞ்ச்குலா சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று (25.08.2017)  தீர்ப்பு வழங்கி உள்ளது. தண்டனை விவரம் 28.08.2017  திங்கள்கிழமை அன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

HARYANA Gurmeet Ram Rahim

HARYANA

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான குர்மீத் ராம் ரஹீம் சிங் வழக்கில் இன்று (25.08.2017) தீர்ப்பு வழங்கும் போது வன்முறை வெடிக்கலாம் என முன் கூட்டியே பஞ்சாப், அரியானா, சண்டிகார் மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ராணுவம், துணை ராணுவம், மாநில போலீஸ் படைகள் என 50 ஆயிரத்திற்கும் அதிகமான படை வீரர்கள் குவிக்கப்பட்டும், வன்முறையாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக வெறியாட்டம் போட்டுள்ளார்கள் என்பதை நினைக்கும் போது இது ஜனநாயக நாடா? இல்லை சாமியார்கள் நாடா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

ஒரு தேசத்தையே நாசம் செய்யும் அளவிற்கு இவர்கள் வளர்ந்து இருக்கிறார்கள் என்றால், இவர்களை வளர்த்து விட்டவர்கள் யார்? இதை கண்காணிக்காமல் இருந்தது யார் குற்றம்?

சாமியாரின் வன்முறையாளர்கள், பாதுகாப்பு படையினரையே பந்தாடுகிறார்கள்; ஊடகத்துறையினரை ஓட ஒட விரட்டுகிறார்கள்; கண்ணில் கண்ட வாகனங்களையெல்லாம் தீ வைத்து கொளுத்துகிறார்கள்; பஞ்சாப், அரியானா, சண்டிகார் மாநிலங்களில் எங்கு பார்த்தாலும் தீ பிழம்பாக காட்சியளிக்கிறது….! பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியில் நடமாடமுடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

எரிக்கப்பட்டது வாகனங்கள் அல்ல; நீதி! மண்டியிட்டது மக்கள் அல்ல; ஆட்சி மற்றும் நிர்வாகம்! கொளுத்தபட்டது ஊடகமல்ல; உண்மை! ஆம், ஜனநாயகத்தின் நான்கு தூண்களுமே இன்று கிரிமினல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங் காலடியில் மிதிப்பட்டு, ஆழமாக குழித்தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

குர்மீத் ராம் ரஹீம் சிங் “குற்றவாளி” என்று இன்று அறிவித்ததற்கே இத்தனை வன்முறை வெறியாட்டம் என்றால், தண்டனை வழங்கப்போகும் நீதிபதியின் மனநிலையையும், அவர் குடும்பத்தாரின் பாதுக்காப்பையும்  கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்! அதைவிட குர்மீத் ராம் ரஹீம் சிங்கால் பலாத்காரத்திற்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தாரையும், அவர்களது உறவினர்களையும் யார் பாதுகாப்பது? நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது.

பேசாமல், கிரிமினல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங்கிடமே இந்த தேசத்தை ஒப்படைத்துவிடலாம். ஏனென்றால், இந்த தேசத்தையே கைப்பற்றும் அளவிற்கு பணப்பலமும், ஆள்பலமும் அளவுக்கு அதிகமாகவே அவரிடம் இருக்கிறது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

 ullatchithagaval@gmail.com