இலங்கையில் நடந்தவை மோசமான வன்முறைகள்; ஜெனிவா மாநாட்டில் நவநீதம்பிள்ளை !

Navanethem Pillayஇலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்றவை மிக மோசமான வன்முறைகள். அவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு அந்த நாட்டு அரசுக்கு இருக்கிறது. இதனை இலங்கை அரசு சரியாகச் செய்ய வேண்டியதுடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் செயற்படுத்த வேண்டும்.

 25.02.2013 ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் ஆரம்ப உரை நிகழ்த்திய மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இவ்வாறு தெரிவித்தார்.

 இலங்கையில் இடம்பெற்ற போரில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து அவர் தனது உரையில் காட்டமாகச் சுட்டிக்காட்டினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் ருவண்டா, பொஸ்னியா, ஹேர்ஜிகோவினா ஆகிய நாடுகளில் இனப்படுகொலைகளில் மடிந்துள்ளனர்.  பலஸ்தீன எல்லைகள் இன்னும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஈராக்கிலும், இலங்கையிலும் பாரிய அளவில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.

 சர்வதேச, தேசிய மட்டங்களில் நீதிக்குப் புறம்பான தண்டனைகளுக்கு எதிராக நாம் போராடி வருகிறோம். பொறுப்புக்கூறலுக்கான கடப்பாடுகளை உத்தரவாதப்படுத்தி வருகிறோம். நீதி நடைமுறைகளை முன்னெடுப்பதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முயல்கிறோம்.

 எனினும், கட்டளையிடும் அதிகாரத்தில் உள்ள அநேகர் பாரதூரமான குற்றச்செயல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்குத் தண்டனை பெறாமல், நீதியின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர். உள்ளகச் சண்டைகளின்போது தொடர்ந்து போர்க்குற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

 ஆப்கானிஸ்தான், கொங்கோ ஜனநாயகக் குடியரசு, மாலி, சூடான், சிரியா ஆகிய நாடுகளில் போர்க்குற்றங்கள் நீடிக்கின்றன. இத்தகைய குற்றங்களையும், அத்துமீறல்களையும், இவற்றைக் கட்டவிழ்ப்பவர்களையும் கையாளுவதற்கான முறைமையை நாம் தொடர்ந்தும் வலுப்படுத்த வேண்டும்.

 சர்வதேச சமூகத்திலுள்ள நாம் இத்தகைய சூழ்நிலை உருவாகுவதையோ, மோசமடைவதையோ தடுக்க முனைப்பாகச் செயற்படவேண்டும். தேசிய, பிராந்திய உலக மட்டங்களில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதில் சுயாதீனமான அதிகாரபூர்வ கேந்திர நிறுவனமாக இது திகழ்கிறது.

 ஆரம்பத்தில் 1990-களில் பத்துக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டிருந்த இந்நிறுவனம் தற்போது சர்வதேச ரீதியாக 101 கிளைகளை நிறுவியுள்ளது. இவற்றில் 71 கிளைகள் “ஏ’ தரத்தில் உள்ளன.

 வியன்னா மாநாட்டில் நான் மகளிர் உரிமைகளுக்கான சிவில் சமூக அமைப்பொன்றின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டேன். இது எனக்கு பெருமிதமளிக்கக்கூடியதாக இருந்தது.

 எனினும், உலக மாநாட்டில் ஓர் அரசசார்பற்ற நிறுவனம் இந்த பங்களிப்பைச் செய்துள்ளது. இதுவே ஈடிணையில்லாத ஆணையின் மூலம் உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிறுவப்படக் காரணமாக அமைந்தது.

 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இன்று சிவில் அமைப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இன்று அநேக காத்திரமான தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள் உருவாகியுள்ளன.

 இந்த தேசிய மனித உரிமைகள் காவலர்களே எமது கலை கதாநாயகர்களாவர். எத்தனையோ நாடுகளின் அதிகார வட்டாரங்கள் தொடர்ந்தும் சிவில் சமூக அமைப்புகளை உதாசீனப்படுத்தி வருகின்றன.

 சிவில் சமூக அமைப்புகளையும், மனித உரிமைகள் பாதுகாவலர்களையும், ஊடகங்களையும் நசுக்கி வருகின்றன. இந்த நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் மனித உரிமைகளுக்கு ஜீவ குருதியை ஊட்டுவதைப் பார்க்கின்றோம்.

 துஷ்பிரயோகங்கள், தரமற்ற சட்டத்துறை, அதிகாரக் குறுக்கீடு ஆகியவற்றால் பாதிப்படையும் மக்கள் வாழ்வில் மாற்றத்தை இவர்களே ஊக்குவிக்கிறார்கள்.

 தைரியமான மனித உரிமைகள் பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள்; தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்; கொலை செய்யப்பட்டுள்ளார்கள்; மற்றவர்களின் மனித உரிமைகளுக்காகப் பாடுபடுவதற்காக இக்கதிக்கு இவர்கள் ஆளாகிறார்கள். இது தொடர்பான தகவல்களைத் தொடர்ந்தும் செவிமடுத்து வருகிறேன்.

 இந்தச் சபையின் முன்னெடுப்புகளின் போதும் சிலவேளைகளில் இத்தகைய மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய ஒடுக்குமுறையை ஒருபோதும் நாம் ஊக்குவிக்க மாட்டோம். சர்வதேச மனித உரிமைகள் முறைமையைப் பேணுவோருக்கு எதிரான நடவடிக்கைகளையும் பொறுக்க மாட்டோம்.

 எமக்குள்ள ஆணையை தக்க வகையில் பயன்படுத்துவோம் வியன்னாவிலுள்ள ஆணையாளர் அலுவலகம் 100 ஊழியர்களை மாத்திரமே கொண்டிருந்தது. இன்று ஜெனிவாவைத் தவிர, மற்றுமிரு நாடுகளுக்கும் வியாபித்துள்ளது.

 இப்போது ஊழியர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. உலக அளவில் 58 கள நிலைகளைக் கொண்டுள்ளது. உதவி கோரி தொடர்ந்தும் வேண்டுகோள்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. எங்களால் திருப்திப்படுத்த முடியாதுள்ளது.

 எங்கும் எவர் ஒருவரினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் எமது ஆணையைத் தக்கவகையில் நாம் பயன்படுத்துவோம். உங்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு மேலும் தேவை.

 குறிப்பாக, உயர்வான  மேலும் தக்கரீதியிலான  நிரந்தர மட்டத்திலான நிதியுதவியே அவசியம். சர்வதேச பிரகடனத்தின் அபிலாஷைகளை நிறைவுசெய்ய நாம் போதிய மனிதவளத்தையும் நிதிவளங்களையும் போதியளவில் அர்ப்பணிக்கத் தவறிவருகின்றோம்.

 முழு உலக அளவிலான நாகரிகத்தை மேம்படுத்துவதற்காக மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக அங்கீகரிக்கின்றோம். 7 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களின் நலன்களுக்காக நாம் மேற்கொள்ளும் பணிகளை மென்மேலும் வலுப்படுத்தவிருக்கிறோம் இப்படி அவர் தெரிவித்தார்.

Leave a Reply