ஆவின் பால் விலை உயர்த்தப்படவில்லை : அதிகாரி தகவல்

aavin-logoதமிழக அரசு சமீபத்தில் பால் கொள்முதல் விலையை ரூ.3 அதிகரித்து வழங்கியது. அதே சமயம் பால் விலை நுகர்வோர்களுக்கு உயர்த்தப்படவில்லை என்று அறிவித்தது.இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பால்விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இது பற்றி ஆவின் அதிகாரி கூறியதாவது:– தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிறுவனம் வழக்கமான விலையில்தான் பொது மக்களுக்கு பால் விநியோகம் செய்கிறது. இந்த நிலையில் சில ஊர்களில் பால் விலை உயர்த்தப்பட்டதாக கூறி மக்களை ஏமாற்றி சிலர் பால் விற்பனை செய்கிறார்கள். ஆவின் நிறுவனம் பொது மக்களுக்கு வழங்கும் பால் விலையை உயர்த்தவில்லை.

எனவே எங்காவது பால் கூடுதல் விலைக்கு விற்றால் அது பற்றி பொது மக்கள் தகவல் கொடுக்கலாம். பால் விலையை அதிகாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆவின் பால் விலை விவரம் (½ லிட்டர்) வருமாறு:–

நீலநிற பால் பாக்கெட்– கார்டுக்கு ரூ.12, வெளி மார்க்கெட் ரூ.13.

பச்சை நிற பாக்கெட்– கார்டுக்கு ரூ.14.50, வெளி மார்க்கெட் ரூ.15.50.

ஆரஞ்சு நிற பாக்கெட்– கார்டுக்கு ரூ.16.50, வெளி மார்க்கெட் ரூ.17.50. மெஜந்தா பாக்கெட்– கார்டுக்கு ரூ.11.50, வெளி மார்க்கெட் ரூ.12.

நீல நிற பாக்கெட் (1 லிட்டர்)– கார்டுக்கு ரூ.24, வெளி மார்க்கெட் ரூ.27.

தானியங்கி நிலையங்களில் ½ லிட்டர் பால் ரூ.14.50, சில்லரை விலை ரூ.15.50. இவ்வாறு அதிகாரி கூறினார்.