அம்மா உணவகம் ஒராண்டு நிறைவு : அனைத்து உணவகங்களிலும் சர்க்கரை பொங்கல் இலவசமாக வழங்கப்பட்டது

amma-unavagamAmmaunavaham

அம்மா உணவகம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை,சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள் மூலமாக இயங்கும் மலிவு விலை உணவகத்திற்கு இடப்பட்டுள்ள பெயராகும். இது சென்னையின் அனைத்து பகுதிகளிலும் திறக்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்கள் குறைந்த செலவில் வயிறாற சாப்பிட வேண்டும் என்பதற்காக மலிவு விலை சிற்றுண்டி உணவகம் தொடங்கப்பட்டது. மலிவு விலை சிற்றுண்டி உணவகம் என்ற பெயரை ‘அம்மா உணவகம்’ என்று மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சியில் தீர்மானம் 2013 மார்ச் 23-ம் தேதியில் நிறைவேற்றப்பட்டது. அப்போது மலிவு விலை உணவகங்களின் எண்ணிக்கை எழுபத்தி மூன்றாக இருந்தன.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் வார்டுக்கு ஒன்று வீதம் 200 இடங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதம் போன்றவை வழங்கப்படுகிறது. மலிவான விலையில் உணவு விற்கப்படுவதால் இந்த உணவகத்திற்கு பொது மக்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

சென்னையில் தொடங்கிய இந்த திட்டம் மற்ற மாநகராட்சிகளிலும் விரிவுபடுத்தப்பட்டது. பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அம்மா உணவகம் இருந்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று ஆய்வு செய்யப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சமீபத்தில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது.

 இது அங்கு வரும் நோயாளிகள் மட்டுமின்றி உறவினர்கள், பார்வையாளர்கள், ஆட்டோ தொழிலாளர்களுக்கு பயன் உள்ளதாக அமைந்துள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள மேலும் 6 அரசு ஆஸ்பத்திரி வளாகங்களில் உணவகம் வருகிற 21–ந் தேதி திறக்கப்பட உள்ளது. அம்மா உணவகம் திறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இன்று வரை சுமார் 9 கோடி இட்லி விற்கப்பட்டதாக தெரிகிறது. 18.02.2014 வரை 8 கோடியே 93 லட்சம் இட்லியும், ஒரு கோடியே 54 லட்சம் சாம்பார் சாதமும் விற்பனையாகி உள்ளது. அம்மா உணவகம் மூலம் இதுவரை கிடைத்த வருவாய் ரூ.26.24 கோடியாகும்.

சென்னையில் இது போன்று ஆயிரம் உணவகங்கள் திறக்கப்பட வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாகும். அதன் அடிப்படையில் மேலும் உணவகங்கள் திறக்க மாநகராட்சி மாநகரங்களில் இடங்களை தேர்வு செய்து வருகிறது.

உணவகம் திறந்து ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் இன்று (19.02.2014) அனைத்து அம்மா உணவகத்திலும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

இத்திட்டம் தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால் மற்ற மாநிலங்களிலும் இதே போன்று மலிவு விலை உணவகங்களை திறக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் மலிவு விலையில் உணவகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநில உயர் அதிகாரிகள் சென்னை வந்து அம்மா உணவங்களை நேரில் பார்வையிட்டு சென்றார்கள் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

வருங்காலத்தில் ஜெ.ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் மத்தியில் ஒரு இணக்காமான அரசு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகும் நிலையில் இத்திட்டம் உணவுக்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டமாக இந்தியா முழுவதும்  நடைமுறைபடுத்தும் வாய்ப்பு நிச்சயம் உருவாகும்.